AriKomban: கேரளாவில் 10 பேரை பலி கொண்ட அரிசி கொம்பன் யானை அரசுப் பேருந்தை துரத்தியதால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published May 8, 2023, 10:36 AM IST

கேரளாவில் 10 பேரை கொன்ற அரிசி கொம்பன் யானை மேகமலையில் அரசுப் பேருந்தை துரத்திய நிலையில் மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மேகமலையில் வசிக்கும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே உள்ள சின்னக்காணல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் என்ற யானை தற்போது வரை 10 நபர்களை கொன்றுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் 30ம் தேதியன்று மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் அரிசி கொம்பன் யானை உயிருடன் பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அன்றைய தினம் இரவே பிடிபட்ட அரிசி கொம்பன் யானையை தேக்கடியில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கேரள வனத்துறையினர் விட்டனர். மேலும் யானையை கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவியும் பொருத்தப்பட்டு கேரள வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்தும் வந்தனர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் கேரள வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை அடுத்த இரண்டு தினங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியில் நுழைந்தது. தேனி மாவட்டம் சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியில் இரவங்கலாறு, மணலாறு, ஹைவேவிஸ் உள்ளிட்ட இடங்களுக்கு அரசிகொம்பன் யானை உலவி வருகிறது.

இதனால் மேகமலையில் இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இரங்கலாறு உள்ளிட்ட ஒரு சில மலைக் கிராம மக்கள் வனப்பகுதிகளுக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேகமலைக்கு செல்லும் நுழைவுப் பகுதியான உட்பிரையர் தேயிலை தோட்டம் பகுதியில் தற்போது அரிசி கொம்பன் யானை வருகிறது. இன்று அதிகாலை மேகமலைக்குச் சென்ற அரசுப் பேருந்தை உட்பிரையர் தேயிலை தோட்டத்திலிருந்து தனியார் விடுதி வரை அரிசி கொம்பன் யானை துரத்திச் சென்றுள்ளது. இதனால் ஓட்டுனர், நடத்துனர் பயணிகள் உட்பட அனைவரும் பீதி அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அரசி கொம்பன் யானை தற்போது சாலைகளில் உலா வரத் தொடங்கியதால் மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு குழுக்களாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரிசி கொம்பன் யானையின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் ரேடியோ காலர் கருவியை கண்காணிக்கும் அனைத்து உபகரணங்களும் கேரள வனத்துறையினரிடம் மட்டுமே உள்ள நிலையில், யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியாமல் தமிழக வனத்துறையினர் திணறி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் யானையின் நடமாட்டம் குறித்த தகவல்களை கேரள வனத்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அரிசி கொம்பன் யானை தற்போது மேகமலை பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வந்து கொண்டிருப்பதால் மேகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர்.

click me!