
தமிழகத்தில் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. SIR என்னும் பெயரில் பாஜக அரசு மக்களின் வாக்குரிமையை தடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து SIRக்கு எதிராக திமுக தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் SIRக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
''தமிழகத்தில் SIR ஐ செயல்படுத்தினால் லட்சக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும். அரசியலைப்பு சட்டத்தை மீறி அதிகாரங்களை மீறி SIR ஐ தேர்தல் ஆணையம் செயல்படுத்த துடிக்கிறது'' என்று கூறி SIR-க்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் வரும் 11ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்தது. பாக முகவர்கள் எப்படி செயல்பட வேண்டும்? என்பது குறித்து விளக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ''SIR என்னும் பெயரில் மக்களின் வாக்குரிமையை திருட மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. ஆகவே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்.
ஒரு வாக்காளர் கூட மிஸ் ஆகக் கூடாது
தகுதியான ஒரு வாக்காளர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது. இதேபோல் தகுதி இல்லாத ஒருவர் கூட வாக்காளர் பட்டியலில் இணைந்து விடக்கூடாது. வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த பாஜக சதித்திட்டம் தீட்டி வருகிறது. அதாவது தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாகத்துறை மூலமாக நம்மை வீழ்த்த சதி செய்கிறார்கள். யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். 2026ல் களம் நம்முடையது தான்'' என்று தெரிவித்தார்.