
சேலத்தில் அதிமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வாங்கி திமுக அரசு 24,000 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளதாக பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய இபிஎஸ், ''''இந்த பத்து ரூபாய்.. பத்து ரூபாய்''.. பாட்டு பாடும்போது என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும். யார் பாட்டு பாடுனா, யார் நடத்தியது என்றும் உங்களுக்கு தெரியும்.
தமிழகத்தில் 6,000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான பார்களை திமுகவை சேர்ந்தவர்கள் எடுத்துக் கொண்டார்கள். பார்களில் முறைகேடாக மதுபானங்கள் விற்கப்படுகின்றன. டாஸ்மாக்கில் 10 ரூபாய் அதிகம் கொடுத்தால் தான் மதுபாட்டில் கொடுக்கிறார்கள். நாள் ஒன்று ஒன்றரை கோடி மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று சொல்லும்போது ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு வருகிறது. நம்மாளுக (அதிமுக) யாரும் டாஸ்மாக் கடைக்கு போகாதீங்கப்பா. அது தவறு. நம்மாளு யாரும் போகாமாட்டங்க.
ஆனால் திமுககாரர்கள் அங்கேயே குடியிருக்கிறார்கள். அவங்ககிட்ட இருந்துதான் காசை புடுங்குகிறார்கள். சொந்த கட்சியினரிடமிருந்தே காசை புடுங்குவது தான் திமுக. ஒருநாளைக்கு ஒன்றரை கோடி ரூபாய் டாஸ்மாக்கில் இருந்து திமுக மேலிடத்துக்கு செல்கிறது. மாசத்துக்கு 450 கோடி ரூபாய், வருஷத்துக்கு 5,500 கோடி ரூபாய் திமுக மேலிடத்துக்கு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
கண்டுபிடித்த அமலாக்கத்துறை
இந்த நான்கரை ஆண்டுகளில் 24,000 கோடி ரூபாய் திமுக அரசு டாஸ்மாக்கில் இருந்து கொள்ளையடித்துள்ளது. பார்களில் நடக்கும் முறைகேடுகள் மூலமாக தனியாக வருமானம் கிடைக்கிறது. மொத்தமாக 50,000 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இதை திமுக ஏதேதோ பேசி சமாளிக்கிறது. விரைவில் உண்மை வெளிவரும்.
டிரான்ஸ்பார்ம்கள் கொள்முதலில் முறைகேடு
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் மின்வாரியத்துறையில் டிரான்ஸ்பார்மகள் கொள்முதலிலும் ம் முறைகேடுகள் நடந்துள்ளன. டிரான்ஸ்பார்ம்கள் கொள்முதலுக்காக எடுக்கப்பட்ட 32 டெண்டர்களும் ஒரே விலை. உதாரணத்துக்கு ஒரு டிரான்ஸ்பார்முக்கு 5500 ரூபாய் என்றால் 32 டெண்டரும் அதே விலை தான். எப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள்.
வரி பணத்திலும் ஊழல்
சட்டத்தின் மீதும், மக்கள் மீதும் பயம் இல்லாததும் தான் இதற்கு காரணம். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் திமுக குடும்பத்தினர்களின் கஜானாவை நிரப்புகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வீட்டுக்கு 100% வரியும், கடைக்கு 150% வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரியிலும் திமுக ஊழல் செய்துள்ளது. மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரியில் ஊழல் செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடுக்கு மட்டுமின்றி பன்றிக்கும் வரி போட்டார்கள்.
ஊழலின் மொத்த உருவம் திமுக
இந்த ஊழல் முறைகேட்டில் மதுரை மேயர், 5 மண்டல அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். மேயரின் கணவர் சிறையில் இருக்கிறார். இன்று வரைக்கும் மதுரைக்கு மேயர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. உட்கட்சி பூசல். பங்கு பிரிப்பதில் பிரச்சனை. இப்படியாக ஊழலின் மொத்த உருவமாக திமுக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.