
திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டு 75வது ஆண்டு நிறைவை ஒட்டி அக்கட்சியின் இளைஞரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக 75 அறிவுத்திருவிழா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கட்சியின் தலைவர் ஸ்டாலின் உட்பட மூத்த நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பொதுச் செயலாளர் துரைமுருகன், “அண்ணா காலத்தில் இருந்து அரசியலில் சில தவறுகள் ஏற்பட்டாலும் கூட உயிர் கொள்ளியாக இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை ஆகியவற்றை எப்பொழுதும் விட்டுக் கொடுத்தது கிடையாது. இந்த இயக்கத்தைத் தொடங்கி 67ல் ஆட்சியை பிடித்து கலைஞர் கையில் ஒப்படைத்துவிட்டு சென்றார். கலைஞர் மிகவும் வேகமாகவும், சிறப்பாகவும் ஆட்சியை மேற்கொண்டார்.
கலைஞரின் மறைவுக்கு பின்னர் மு.க.ஸ்டாலினை அழைத்து என் பாதையை நடு என்று அறிவுறுத்தி அவரிடத்திலேயே முதல்வரும் அதே போன்று கழக தலைவர் ஒப்படைத்திருக்கிறார். மு.க.ஸ்டாலினை நான் இளம் வயதில் இருந்தே அறிந்தவன். இருப்பினும் நானே இன்று அவரை வியந்து பார்க்கும் வகையில் அவர் பணியாற்றுகிறார். ஏனெனில் அவர் கலைஞரிடம் கற்றவர், கலைஞருடன் பணியாற்றியவர்.
அதே போல் அடுத்து உதயநிதி. ராஜராஜ சோழருக்கு பின்னர் ராஜேந்திர சோழர். ராஜராஜன் மன்னனாக இருக்கும் போது அந்த பணியை ராஜேந்திர சோழன் ஏற்றுக்கொண்டார். ஆனால் ராஜேந்திர சோழனுக்கு அப்படி இல்லை. இன்றைக்கு எழுதி வைத்துக் கொள்ளுங்கள், உதயநிதி ஒருநாள் ராஜேந்திர சோழனாக மாறுவார் என்பது என்னுடைய அரசியல் கணக்கு. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நான் கலைஞர் குடும்பத்தோடு பழகியுள்ளேன்” என்று பேசியது தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சியை ஏற்படுத்தியது.