தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகுது… இன்று இரவு முதல் மிக,மிக கனமழை எச்சரிக்கை...சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்

Nov 29, 2017, 11:22 AM IST



தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று இரவு முதல் மிக மிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்து அவர் பேஸ்புக் பதிவில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக் பதிவில் பிரதீப் ஜான் பதிவிட்டு இருப்தாவது-

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெய்யப்போகும் சிறப்பு மழைக்கான  சிறப்பு பதிவு. இன்று இரவு முதல் டிசம்பர் 1ந்தேதி வரை கனமழை இருக்கும். இலங்கைக்கு அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் தீவிரமடைந்து புயலாக மாறி(வாய்ப்புண்டு), கன்னியாகுமரி லட்சத்தீவு கடற்பகுதிக்கு செல்லும்.  

இலங்கைக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கன்னியாகுமரி அருகே கடற்கரைப்பகுதிக்கு நகர்ந்துவிட்டது. இதனால், (29ந்தேதி)இன்று மாலை முதல், நாளைவரை 30ந்தேதிவரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

எங்கெல்லாம் மழை இருக்கும்?

இன்று இரவு முதல் தொடங்கும் கனமழை நாளை தீவிரமடைந்து, மிக கனமழையாக மாறும். கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை இருக்கும். இந்த மாவட்டங்களில் மட்டுமல்லாது, அருகே இருக்கும் விருதுநகர், ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர் உள்மாவட்டங்களான  நாமக்கல், திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்கும்.

நீலகிரி மாவட்டத்திலும் மழை இருக்கும், குறிப்ாக குன்னூர் பகுதியில் கிழக்குப்பகுதி பள்ளத்தாக்கு மிகப்பெரிதானது, இதனால், கன்னியாகுமரி கடல்பகுதியில் இறுந்து அரேபியக் கடலுக்கு குறைந்த காற்றழுத்ததாழ்வுப்பகுதி நகரும்போது, ஈரப்பதம் காரணமாக கனமழை பெய்யக்கூடும்.

எந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

மலைப்பகுதிகளான கன்னியாகுமரி, நெல்லை, தேனி மாவட்டங்களில் இன்று இரவு முதல் மிக, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி பகுதியில் உள்ள கொடையாறு, பேச்சிப்பாறை, குலசேகரம், நெல்லை பகுதியில் உள்ள பாபநாசம், மாஞ்சோலை பகுதியில் நல்ல மழை இருக்கும்.

ஒட்டுமொத்தமாக, தென் தமிழகம் அதன் உள்மாவட்டங்களில் நீண்ட நாட்களுக்கு பின் பரவலாக மழை பெய்யப்போகிறது.

மீனவர்களுக்காக…..

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மன்னார் வளைகுடா, கேரளாவின் தென்பகுதி கடற்கரை பகுதிகளில் உங்களுக்கு மீனவர்கள் யாரேனும் பழக்கம் இருந்தால், தெரிந்திருந்தால், கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்துவிடுங்கள். நான் கூறியவை அனைத்தும் மிக விரைவாக நடக்கும் என்பதால், கடலுக்குள் செல்லவேண்டாம்.

கடலுக்குள் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70கி.மீ வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக 30ந்தேதி நாளை முதல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், ராமேஸ்வரத்தில் காற்றின் வேகம் அதிகரித்து, மிகப்பெரிய அலைகள் உருவாகும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.