கோவை மதுக்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் இறந்த விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்த தென்னக ரயில்வே.
கோவை மதுக்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 25 வயது பெண் யானை, 6 வயது குட்டி யானை, 18 வயது மக்னா யானை ஆகிய மூன்று யானைகளும் மங்களூரூ-சென்னை ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த, 25 வயது பெண் யானையின் வயிற்றில் ஒரு மாத கரு இருந்தது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன்தொடர்ச்சியாக, ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளரை தமிழக வனத்துறையின் பிடித்து விசாரித்தனர்.
undefined
குறிப்பிட்ட இடத்தில் ரயில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் வந்ததா என ரயில் இன்ஜினில் இருந்து எடுக்கப்பட்ட 'சிப்' வாயிலாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ரயில் வேகம் குறித்து எழுத்துபூர்வமாக தகவல் பெற தமிழக வனத்துறையினர் 5 பேர் நேற்று முன்தினம் கேரளா பாலக்காடு சென்றனர். அப்போது கேரளாவில் தமிழக வனத்துறையினரை சிறைபிடித்த ரயில்வே அதிகாரிகள், தங்கள் ஊழியர்களை விடுவிக்கவில்லை என்றால் இன்ஜின் 'சிப்'பை அத்துமீறி எடுத்ததாக உங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர். இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டு சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன.
ரயில்வே அதிகாரிகள் மற்றும் தமிழக வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் தமிழக வனத்துறையினர் விடுவிக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய கோழிக்கோட்டை சேர்ந்த இன்ஜின் டிரைவர் சுபயர் மற்றும் உதவியாளர் அகில் ஆகியோர் மீது தமிழக வனத்துறையினர் வன பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து இருவரையும் விடுவித்தனர். தமிழக வனத்துறையினர் கூறுகையில், விபத்தை ஏற்படுத்திய இன்ஜினில் இருந்து வேகத்தை கணக்கிடும் 'சிப்'பை வனத்துறையினர் யாரும் அத்துமீறி எடுக்கவில்லை. ரயில் இன்ஜினை இயக்கிய நபரே தான் 'சிப்'பை எடுத்துக் கொடுத்தார். அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் ரயில் எத்தனை கி.மீ வேகத்தில் சென்றது என்பதை கண்டுபிடிக்க முடியும். அதன்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று கூறினர். கோயம்புத்தூர் நவகரையில் ரயில் மோதி யானைகள் இறந்தது தொடர்பாக தென்னக ரயில்வே அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், ‘யானைகள் ரயில்களில் மோதாவண்ணம் தடுக்க பசுமைத் தீர்ப்பாய நீதிபதி உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் குழுவின் அறிவுரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், மாநில வனத்துறையினருடன் இணைந்து செயல்பட்டு இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனி நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.