கிராமப்புற குடிசை வீடுகளுக்கும், வேளாண்மைக்கும், விதைப் பண்ணைக்கும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதுதான் திராவிட மாடலா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்கட்டணம் உயர்வு- சீறும் சீமான்
ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் தாங்க முடியாத சுமையை திமுக அரசு ஏற்றுவது வாக்களித்து அதிகாரத்தை வழங்கிய மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோன்மையாகும் எனநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள உயர்த்தப்பட்ட மின்கட்டண அறிவிப்பின்படி,
பொதுமக்கள் 400 மின்அலகு வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு மின்அலகு ஒன்றுக்கு ரூ.4.60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், தற்போது ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 401 மின்அலகு முதல் 1000 மின்அலகு வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றிற்கு 50 காசுகள் வரை சீராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றுக்கு 40 காசுகளும், கிராமப்புற குடிசை வீடுகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றுக்கு 45 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
திமுக அரசின் சிறிதும் மனச்சான்றற்ற செயல்
அதுமட்டுமன்றி வேளாண் மற்றும் அரசு விதைப்பண்ணைகள், விசைத்தறி, கிராம ஊராட்சி மன்றங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதல் பாதுகாப்புப்படை வீரர்கள் குடியிருப்புகள் என அனைத்திற்கும் ஏறத்தாழ 5 விழுக்காடு அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது திமுக அரசு. ஏற்கனவே, எரிபொருள் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, சுங்க கட்டண உயர்வு என அடுத்தடுத்த விலை உயர்வால் ஏழை மக்கள் வாங்கும் திறனை முற்றிலும் இழந்து அல்லலுறும் நிலையில் தற்போது மின்கட்டணத்தையும் உயர்த்தி இருக்கும் திமுக அரசின் சிறிதும் மனச்சான்றற்ற செயல் அப்பட்டமான கொடுங்கோன்மையாகும்.
கிராமப்புற குடிசை வீடுகளுக்கும், வேளாண்மைக்கும், விதைப் பண்ணைக்கும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதுதான் திராவிட மாடலா? அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணத்தை திமுக அரசு அதிகரித்திருப்பது சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும். மேலும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தையும் உயர்த்தியிருப்பதன் மூலம் சிறுகுறு தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் இக்கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவர். பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வால் மீண்டுவரமுடியாமல் முடங்கிய சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல மூச்சுவிடும் நிலையில் தற்போதைய திமுக அரசின் மின்கட்டண உயர்வு அவர்கள் தொழில் செய்ய முடியாதபடி மீண்டும் முடக்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்
கடந்தகால மின்கட்டண உயர்வுக்கு இந்திய ஒன்றிய அரசை கைகாட்டிய திமுக அரசு, தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு யாரை கைகாட்டப்போகிறது? நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மக்கள் நலனைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, குருதி உறிஞ்சும் அட்டைப்போல மக்களைக் கசக்கிப் பிழிந்து, வழிப்பறிபோல வரியைப் பறிக்க நினைப்பது சிறிதும் அறமற்ற கொடுங்கோன்மையாகும்.
நாடாளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வென்ற பிறகு தந்திரமாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும். ஆகவே, மக்களை வாட்டிவதைக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென கேட்டுக்கொள்வதாக சீமான் தெரிவித்துள்ளார்.
TANGEDCO: தமிழகத்தில் மின் கட்டண உயர்வு.. என்ன காரணம்? மின் வாரியம் கொடுத்த பரபரப்பு விளக்கம்!