தருமபுரியில் அறிவியல் பயிற்சிப் பட்டறை; 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு…

First Published Oct 14, 2017, 7:27 AM IST
Highlights
Science training workshop in Dharmapuri More than 200 students enthusiastically participate ...


தருமபுரி

தருமபுரியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் நடைப்பெற்ற அறிவியல் பயிற்சிப் பட்டறையில் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தருமபுரி மாவட்டம், அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், “அண்மைக் காலங்களில் ஒளிபொருள்களின் போக்குகள் மற்றும் அதன் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் இரண்டு நாள்கள் அறிவியல் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சிக்கு, பெரியார் பல்கலைக்கழக இயற்பியல் துறைத் தலைவர் பி.குமாரதாசன் தலைமை வகித்துப் பேசினார். இயற்பியல் துறை இணை பேராசிரியர் மா.செல்வபாண்டியன் வரவேற்றார்.

புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.பொற்செழியன் இதில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது:

“இன்றைய இந்தியாவின் அறிவியல் போக்கு மற்றும் கண்டுபிடிப்புகள் மக்கள் பயன்பாட்டுக்கேற்ப கண்டறிய வேண்டும். அதற்கான ஆக்கப்பூர்வ சிந்தனையில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.

மேலும், ஒளி பொருள்களின் ஆராய்ச்சியில் பல்வேறு பன்முக அறிவினை இளம் மாணவர்கள் வளர்க்க வேண்டும்” என்று பேசினார்.

அண்ணா பல்கலைக்கழகப் படிக வளர்ச்சி மைய பேராசிரியர் டி.அறிவாளி, பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க இயக்குநர் (பொ) பி.மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

விழாவின் இறுதியில் உதவிப் பேராசிரியர் எம்.பிரசாத் நன்றித் தெரிவித்தார்.

இதில், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், நாமக்கல், ராசிபுரம், தருமபுரி, அரூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இப்பயிற்சிப் பட்டறை இரண்டாவது நாளான நேற்று இனிதே முடிந்தது.

click me!