
விலை மதிக்க முடியாத 41 உயிர்களை காவு வாங்கிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், தவெகவின் 2 நிர்வாகிகளை கைது செய்த காவல்துறை, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி.நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. ஆனாலும் சம்பவத்துக்கு காரணமான தவெக தலைவர் விஜய் மீது இதுவரை ஒரு வழக்குப்பதிவு கூட செய்யாதது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு பல்வேறு பத்திரிகையாளர்கள் விஜய் மீது கடும் விமர்சனம் வைத்து வருகின்றனர். இதில் சிலர் விஜய்யை ஒருமையில் பேசி வருகின்றனர். அதில் முதன்மையானவர் தான் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால். திமுக ஆதரவு பத்திரிகையாளரான நக்கீரன் கோபால் கரூர் சம்பவம் நடந்ததில் இருந்து தான் பேட்டி கொடுக்கும் இடங்களில் எல்லாம் விஜய்யை ஒருமையில் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
''விஜய் மக்களை ஒரு கால்நடையாக கூட மதிக்கவில்லை. அவன் செய்தது நரபலி. 41 உயிர்களை கொலை செய்துள்ளான், நரபலிக்கும் இதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை. தமிழ்நாட்டுக்கே விஷம் தான் இந்த விஜய். அவன் கையில் விலங்கை போட்டு கூட்டி வர வேண்டும். செருப்பால் அடிக்க வேண்டும். மூதேவி விஜய் அரசியலுக்கு தகுதியில்லாதவன்'' என்று நக்கீரன் கோபால் விஜய்யை சரமாரியாக விமர்சித்தார்.
கருத்து நாகரீகமாக இருக்க வேண்டும்
தான் பேசும் இடங்களில் எல்லாம் நக்கீரன் கோபால் விஜய்யை ஒருமையில் பேசி வருகிறார். ஜனநாயக நாட்டில் ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அவர் செய்யும் செயல்கள் பிடிக்கவில்லை என்றால் அவர் மீது எதிர் கருத்துகளை முன்வைக்கலாம். ஆனால் அந்த கருத்து நாகரீகமாக இருக்க வேண்டும். ஆனால் நக்கீரன் கோபாலின் பேச்சு அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஒருமையில் இருப்பதால் தவெகவினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் நக்கீரன் கோபாலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
சவுக்கு சங்கர் கண்டனம்
இந்நிலையில், நக்கீரன் கோபாலின் பேச்சுக்கு பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய யூடியூப் சேனலில் பேசிய அவர், ''விஜய்யை வெட்டி போட்டிருக்க வேண்டாமா? என ஒரு மூத்த பத்திரிகையாளர் பெரிய மீசையை வைத்துக் கொண்டு பேசுகிறார். விஜய்யை செருப்பால் அடிக்க வேண்டும் என்கிறார். இது தான் இப்போது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரமாக உள்ளது. அவர் பேசுவது என்ன மொழி. விஜய்யை சைக்கோ, கொலைகாரன் என பேச சுதந்திரம் உள்ளது.
விஜய்க்கு ஆதரவாக யாரும் பேச கூடாது
ஆனால் நியாயத்தை பேசத் தான் தமிழகத்தில் இப்போது சுதந்திரம் இல்லை. விஜய் பக்கம் கொஞ்சம் நியாயம் உள்ளது என்று நீங்கள் பேசினால் அவதூறு தாக்குதலுக்கு உள்ளாவீர்கள். விஜய்க்கு ஆதரவாக யாரும் பேச கூடாது. பேச்சுரிமை, எழுத்துரிமை, பிரசாரம் செய்வதற்கான உரிமை. ஆயுதங்கள் இல்லாமல் கூடுவதற்கான உரிமை ஆகிய அடிப்படை உரிமை நமக்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு வரும் மக்கள் காவல்துறையை நம்பி தான் வருகின்றனர்.
விஜய்க்கு எதிராக பேசினால் வெகுமதி
விஜய் மீது பொறுப்பு இல்லை. விஜய் காவல்துறை பேச்சை கேட்கவில்லை என்றால் அவரது கூட்டத்துக்கு தடை செய்ய வேண்டியதுதானே. விஜய் வெட்ட வேண்டும். செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசினால் திமுக சந்தோஷப்படும். விஜய்க்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கப்படும். வெகுமதியும் வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.