
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் திமுக அரசின் நிர்வாகத் தவறுகளைச் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இருந்து தமிழகம் முழுவதும் முடக்கியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊடகங்களை முடக்கிய திமுக அரசின் நடவடிக்கைக்கு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
"கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் இருந்து தமிழகம் முழுவதும் முடக்கியிருக்கிறது திமுக அரசு.
ஊடகங்கள் திமுக அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். அதற்காகத்தான், பொதுமக்கள் யாருமே பார்க்காத குடும்பத் தொலைக்காட்சிகளை வைத்திருக்கிறீர்களே? மக்கள் பிரச்சினைகளையும், கேள்விகளையும் வெளிக்கொண்டு வரும் ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்?"
"தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முதலமைச்சர் சொந்தத் தொகுதியிலேயே, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்கின்றனர். தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. அரசுத் துறைகள் அனைத்தும் செயலிழந்து நிற்கின்றன. இப்படி ஒரு இருண்ட சூழலில் தமிழகத்தைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, ஊடகங்களை முடக்கிவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே?"
இவ்வாறு அண்ணாமலை தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசுக்கு எதிராக ஊடக முடக்கம் குறித்த இந்தக் குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.