
'அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; எதிரியும் இல்லை' என்று அடிக்கடி சொல்வர்கள். இந்த வார்த்தைக்கு மிகப் பொருத்தமானவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். திமுக, அதிமுக என்ற இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழ் தேசியம் என்ற அரசியலை கையில் எடுத்து அதில் ஓரளவு வெற்றி கண்டவர் சீமான். சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் ஒரு இடம் கூட ஜெயிக்கவில்லை என்றாலும் சுமார் 8% வாக்குகளை அறுவடை செய்து தனக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது என்று நிரூபித்தார்.
சீமானுக்கு இளைஞர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருந்ததற்கு முக்கிய காரணம் அவர் திராவிட கட்சிகளுக்கு எதிராக எடுத்த மாற்று அரசியல் தான். இப்படி தமிழ் தேசிய அரசியலை தீவிரமாக பேசி வந்த சீமான், அண்மை காலமாக அதில் இருந்து பின்வாங்கி வருவது கண்கூடாக தெரிகிறது. அதிலும் விஜய் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த பிறகு சீமானின் அரசியலில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன.
எந்தவித சமரசமுமின்றி முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சரமாரியாக விமர்சித்து வந்த சீமான், சமீப காலமாக திமுகவை விமர்சிப்பதை குறைத்து வருகிறார். ''உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழ் சினிமாவை மொத்தமாக கபளீகரம் செய்துள்ளது. இதனால் சிறு பட்ஜெட் படங்களை வெளியிட முடியவில்லை'' என தொடர்ந்து விமர்சித்து வந்த சீமான், திடீரென 'ரெட் ஜெயிண்ட் மூவிஸ் எந்த முறைகேடும் செய்வதில்லை' என்று கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தம்பி உதயநிதி முறைகேடு செய்யவில்லை
இது தொடர்பாக ஒரு செய்தி நிறுவனத்துக்கு சீமான் அளித்த பேட்டியில், ''ஒரு படத்துக்கு ரூ.100 கோடி செலவு செய்தேன் என்று தயாரிப்பாளர்கள் கூறினால் ரெட் ஜெயண்ட் அந்த படத்தை 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்கிறது. அந்த படத்தை திரையரங்களில் வெளியிட்டு அதன் கணக்குகளை சரியாக காட்டுகிரார்கள். இதை யார் செய்தால் என்ன? தம்பி உதயநிதி செய்தால் என்ன? வேறு ஒருவ்ர் செய்தால் என்ன?'' என்று கூறியுள்ளார்.
திமுகவை விமர்சிப்பதை குறைத்தார்
அதாவது ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழ் சினிமாவை மொத்தமாக அபரித்துள்ளது என்று கூறி வந்த சீமான், இப்போது ரெட் ஜெயண்ட் முறைகேடு செய்யவில்லை என உதயநிதிக்கு ஆதரவாக பேசியுள்ளதை நாம் தமிழர் கட்சியினரே அவ்வளவாக ரசிக்கவில்லை. விஜய் வருகையால் சீமானின் வாக்குகள் பறிபோய் விட்டது என பலரும் தெரிவித்து வரும் நிலையில், விஜய் வருகைக்கு பிறகு அவரை முழு நேரமாக எதிர்ப்பதை வேலையாக கொண்டு திமுக அரசை விமர்சிப்பதை குறைத்துக் கொண்டார் சீமான்.
ஸ்டாலினை சந்தித்த சீமான்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு முதலில் விஜய் மீது சாப்ட் கார்னர் கொண்டிருந்த சீமான், பின்பு அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய் திமுக அரசை குற்றம்சாட்டுவதை கண்டித்த சீமான், கரூர் சம்பவத்தில் காவலதுறையினர் மீது எந்த தவறும் இல்லை. விஜய் தான் இதற்கு முழு காரணம் என்று விளாசித் தள்ளினார். அண்மையில் முதல்வர் ஸ்டாலின் இல்ல துக்க நிகழ்வில் நேரடியாக ஸ்டாலினையும், உதயநிதியையும் சந்தித்து சீமான் துக்கம் விசாரித்தார்.
சபரீசனால் சீமானுக்குள் நடந்த மாற்றம்
அதற்கு பிறகே திமுகவையும், ஸ்டாலின் மற்றும் உதயநிதியையையும் விமர்சிப்பதை சீமான் குறைத்துக் கொண்டார். ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடம் இருந்து சீமான் பெருந்தொகை பெற்று விட்டதாகவும் அதனால் தான் அவர் திமுக உத்தரவின்பேரில் விஜய்யை கடுமையாக தாக்கி வருவதாகவும் பலர் தெரிவித்தனர். தொடர்ந்து விஜய்யுடன் பகையை வளர்த்தும், திமுகவுடன் நெருக்கம் காட்டி வரும் சீமான், சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.