ஊரக வளர்ச்சித் துறையினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்; 'டல்' அடிக்கும் அலுவலகங்கள்...

First Published Jul 4, 2018, 6:22 AM IST
Highlights
Rural Development Workers held in indefinite strike


கரூர்

ஊரக வளர்ச்சித் துறையினர் கரூரில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். இதனால் அலுவலகங்கள் டல் அடிக்கின்றன.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சத் துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். 

அதன்படி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் நேற்று முதல் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கரூர் மாவட்டத்திலும் இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"ஊராட்சிச் செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும்,

 உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், 

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 

வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடக்கிறது.

கரூரில் மாவட்டத்தில் உள்ள கரூர், தாந்தோன்றிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை மற்றும் கடவூர் ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஊராட்சி வளர்ச்சி பிரிவு, மாவட்ட ஊராட்சி தணிக்கை பிரிவு ஆகிய பிரிவுகளில் உள்ள 534 பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நேற்று அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டதால் 100 நாள் வேலை திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டும் பணி உள்பட துறைரீதியான அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும் என்று இச்சங்கத்தினர் தெரிவித்தனர். 

click me!