உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்; முடங்கிய பணிகள்...

First Published Jul 4, 2018, 10:34 AM IST
Highlights
rural Development Officers strike demanding immediate local elections


நீலகிரி
 
உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் நேற்று வேலைக்கு வராமல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், "ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். 

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். 

இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும். 

பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். 

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 

கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.60-ஐ ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.

ஊராட்சி ஒன்றியங்களின் புதிய கணினி உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். 

முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். 

சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 

ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 இலட்சமாக உயர்த்த வேண்டும். 

வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஊராட்சி செயலாளராக பணியாற்றி 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் முந்தைய பணி காலத்தில் 50% பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 

பொறியாளர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். 

கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்ட்டன. 

உதகைமண்டலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அலுவலர்கள் வேலைக்கு வராததால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி முகமை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி இருந்தன. 

கிராம ஊராட்சி பிரிவு, வளர்ச்சி பிரிவு உள்ளிட்ட பிரிவு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

click me!