
தென்னாட்டு காந்தி, கல்விக்கண் திறந்த கர்ம வீரர், படிக்காத என போற்றப்படுபவர் பெருந்தலைவர் காமராஜர். இன்று காமராஜரின் 121வது பிறந்தநாள். தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி, ஆடம்பரம், பணம், புகழ், விளம்பரத்தை அறவே விரும்பாத ஒரே காமராஜர் பற்றிய சிறப்பு தகவல்களை தற்போது பார்க்கலாம்..
குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மாளுக்கு 1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் ஆண்டு விருதுநகரில் பிறந்தார் காமராஜர். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த காமராஜர் 6-ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. தனது 16-வது வயதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த காமராஜர் தன் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். 1930-ம் ஆண்டு வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரக போராடத்தில் பங்கேற்றதற்காக காமராஜர் முதன்முதலாக சிறைக்கு சென்றார். இதை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற காமராஜர் தனது இளம் வயதின் வாழ்க்கையை சிறையில் கழித்தார். அவர் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
1962-ம் ஆண்டு சாத்தூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு காமராஜர் முதல் வெற்றியை பெற்றார். 1954-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பதவியேற்ற காமராஜர், தனது 9 ஆண்டுகால ஆட்சியில் நூறாண்டுகள் பேசும் அளவுக்கு பல சாதனைகளை செய்தார்.
ஆட்சிக்கு வந்த உடன், ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000ஆக உயர்ந்தது.. 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டமே எம்.ஜி.ஆர்.ஆல் 1980களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும். அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்த பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை ஐஐடி தொடங்கப்பட்டது. கல்விக்கண் திறந்த காமராஜரை கௌரவிக்கும் விதமாக தமிழக அரசு அவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அனுசரித்து வருகிறது.
அடேங்கப்பா.. காமராஜர் பிறந்த தினத்தில் நூலகங்களுக்கு புத்தகங்களை அள்ளி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!
காமராஜர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, பரம்பிக்குளம், சாத்தூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம், ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் என்.எல்.சி, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, கல்பாக்கம் அணு மின் நிலை போன்ற எண்ணற்ற தொழிற்சாலைகளை கொண்டு வேலைவாய்ப்பை அதிகரித்தார்.
3 முறை முதலமைச்சராக இருந்த காமராஜரின் சொத்துக்கள் என்றால், அவர் வீட்டில் விசிட்டர்கள் வந்தால் உட்கார 4,5 நாற்காலி, அவரின் செருப்பு, அவரின் அலாரம், தமிழ், ஆங்கிலத்தில் இருந்த 1500 புத்தகங்கள், அவரின் தாயார் சிவகாமி அம்மையாரின் படம், 2 சூட்கேஸ்களில் இருந்த கதர் ஆடைகள், அவரின் பேனாக்கள், டைம்ஸ் ஆஃப் இந்தியா, துக்ளக் பத்திரிகை, சேவிங் ரேசர் உள்ளிட்ட பொருட்கள் தான். சாகும் வரை வாடகை வீட்டில் வசித்து வந்த காமராஜரின் வங்கிக்கணக்கில் இருந்தது வெறும் 125 ரூபாய் தான்.
மாவட்ட கவுன்சிலரே கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்தும் எந்த சொத்தை சேர்க்காத காமராஜரை போன்ற தலைவர் இனிமே ஒருவர் பிறந்து வந்தால் தான் உண்டு.. ஆனால் அதுவும் சந்தேகம் தான்.
தனக்காக உழைக்காமல், நாட்டு மக்களுக்காக உழைத்த ஒரே தலைவர் காமராஜர் தான். 3 முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட காமராஜர் நாட்டுப் பணியையும் கட்சி பணியையுமே முக்கியம் என்று கருதியவர். இதற்காக அவர் கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் காமராஜர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியைப் பதவி விலகல் செய்து (2. அக்டோபர் 1963) பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9 அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்றார். படிக்காத மேதையாக இருந்தாலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரிந்தவர் காமராஜர்.
1964-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு இறப்புக்கு பின் லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக முன் மொழிந்தார் காமராஜர். தொடர்ந்து 1966-ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்கு பின், நேருவின் மகள் இந்திராகாந்தியை பிரதமராக்கினார் காமராஜர். இதனால் அவர் கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்டார். பதவி, பணம் என எதையும் தனக்கு வேண்டும் என எடுத்துக் கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் சமூக தொண்டு செய்வதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட காமராஜர் 1975-ம் ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதி மறைந்தார். அவரின் உடல் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவரின் புகழ், செயல், தொண்டு ஆகியவற்றுக்கு என்றென்றும் அழிவே கிடையாது என்பதே மறுக்க முடியாத உண்மை.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு வீடாக செல்லும் ஆசிரியர்கள்; மாணவர்கள் பாதிப்பு?