கலைஞர் உரிமைதொகை வழங்கும் திட்டத்திற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வர்கள் ஈடுபடுத்தப்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்க வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் காலக்கட்டங்களில் தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை சரிசெய்யும் விதமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் நிலை இருந்தது.
பின்னர் தன்னார்வலர்கள் தங்கள் வீடுகளில் மாலை நேர வகுப்புகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் கொரோனா காலம் முடிவுற்று இயல்புநிலை திரும்பியதைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பயன்படுத்தப்பட்டனர். குறிப்பாக கிராமப்பகுதிகள், மலை கிராமங்களில் தன்னார்வலர்கள் ஆசிரியர்களாக பயன்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் அடிப்படையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பயணாளர்களை கண்கெடுக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதன்படி இத்திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இல்லம் தேடி கல்வி திட்ட அதிகாரி இளம் பகவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு திட்டங்களுக்கும் ஒரே அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் பகவத் அறிவுறுத்தியதாகக் கூறி இல்லம் தேடி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகளை மேற்கொள்ள சில மாவட்ட அதிகாரிகள் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.
ராணிப்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்ட தம்பதி கவலைக்கிடம்
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள இளம் பட்டதாரிகள், நாங்கள் ஏற்கனவே பட்ட படிப்பு, பி.எட், படித்துவிட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை எழுதியும் அரசுப்பணி கிடைக்காமல் தன்னார்வலர்களாக பணியாற்றி வருகிறோம். இத்தகைய சூழலில் எங்களை வேறு திட்டத்திற்கு பயன்படுத்தினால் எங்களது படிப்பு மற்றும் அனுபவம் பாதிக்கப்படுவதோடு எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளதால் எங்களை வேறு திட்டத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் பட்சத்தில் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.