#RedAlert ஆபத்தில் சென்னை… வெளியானது நெஞ்சை பதற வைக்கும் அறிவிப்பு

By manimegalai aFirst Published Nov 8, 2021, 8:14 AM IST
Highlights

தலைநகர் சென்னைக்கு ரெட் அலர்ட் அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை: தலைநகர் சென்னைக்கு ரெட் அலர்ட் அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் 26ம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பித்த சில நாட்களில் வெகு இயல்பாக இருந்த மழை… பினனர் அடிவெளுக்க தொடங்கியது.

காஞ்சிபுரம்,விழுப்புரம், திருச்சி, தென்காசி, கோவை என பல மாவட்டங்களில் மழை பின்ன எடுத்தது. ஆரம்ப கட்டத்தில் வெகு இயல்பாக மழை இருந்த போதும் நாட்கள் நகர, நகர மழை கொட்டி தள்ளியது. தலைநகர் உள்பட பல மாவட்டங்களில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்தது.

ஒரு வாரத்தில் இயல்பை விட கூடுதலாக அதாவது 40 சதவீதம் அதிக மழை சென்னையில் பதிவானது. கிட்டத்தட்ட 385.5 மிமி மழை பதிவாக வேண்டும். ஆனால் 480.1 மிமீ மழை பதிவாகி சென்னையை திக்குமுக்காட வைத்துள்ளது.

குறிப்பாக நேற்றில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை விடாமல் பெய்தது. இடைவிடாத மழை எதிரொலியாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதோடு, வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

மழை குளம் போல பல பகுதிகளில் காட்சி அளித்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வட சென்னையின் பல பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

2015ம் ஆண்டுக்கு பின்னர் நுங்கம்பாக்கத்தில் 21 செமீ மழை கொட்டியதாக வானிலை மையம் அறிவித்தது. ஏரிகள், கால்வாய்கள் நிரம்பி காட்சி அளித்தன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 100 சதவீதம் நீர்நிலைகள் நிரம்பின.

சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் முழுமையாக நிரம்பியதால் தண்ணீர் திறந்துவிடப்பட்ட வெள்ளக்காடானது. புறநகர் பகுதிகளிலும் பல இடங்களிலும் கனமழை பெய்து வருவதால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி காட்சி அளிக்கிறது.

விடாது மழை பெய்து வரும் இந்த தருணத்தில் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கிறது. அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது என்றும் அதனால் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை அதி கனமழைக்கு வாயப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்து இருக்கிறது. நாளைய தினம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசியில் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்யும் என்று கூறி உள்ளது.

மொத்தம் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் அரசுத்துறைகளின் அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றனர். வெள்ளம் போல காட்சி அளிக்கும் பகுதிகளில் உள்ள மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஆங்காங்கே பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

click me!