MGR Death Revealed : எம்.ஜி.ஆர். மரணத்துக்கு காரணம் இதுதான்! சட்டுன்னு கொளுத்திப்போடும் சைதை துரைசாமி

By Ganesh RamachandranFirst Published Jan 25, 2022, 10:10 AM IST
Highlights

ஜெயலலிதாவின் மரணத்துக்கு ஆணையம் ஒன்றை துவக்கி அது ஒரு மார்க்கமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போதான் எம்.ஜி.ஆர். மரணத்துக்கான விடையே கிடைச்சிருக்குது

அரசியலில் உச்சத்துக்கு வந்து பிரபலமானோர் பலர். பிரபலமாக இருப்பதால் அரசியலுக்குள் வந்து எளிதில் உச்சத்திற்கு வருவோர் சிலர். இதில் சைதை துரைசாமி எந்த ரகமென்பது உங்களுக்கே தெரியும். இந்தியாவில் இன்று நிர்வாக துறையில் சாதித்துக் கொண்டிருக்கும் பல உயரதிகாரிகளை உருவாக்கிய பட்டறை இவருக்கு சொந்தமானது.

ஜெயலலிதா தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க.வின் பொது செயலாளராகவும் கோலோச்சியபோது சென்னை மாநகராட்சியின் முகமாக வலம் வந்தவர் சைதை துரைசாமி.

சமீபத்தில் தன் பர்சனல் வாழ்க்கை பற்றி ஓப்பனாக பேசியிருப்பவர், போகிற போக்கில் எம்.ஜி.ஆரின் மரணம் குறித்த தகவல் ஒன்றையும் பரபரவென கொளுத்திப் போட்டுள்ளார்.

அதாவது தன் உடம்பை கோயில் போல் பேணிய நடிகர்களில் மிக முக்கியமானவர் எம்.ஜி.ஆர்.  உடற்பயிற்சிகள், வாள் வீச்சு, கம்பு சண்டை, கத்தி சண்டை என்று அடுத்த தலைமுறை ஹீரோக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவே விளங்கியவர். ஆனால் திடீரென உடல் சுகவீனப்பட்டவர், மளமளவென சரிந்து சாய்ந்து ஒரு நாள் இறந்தார்.

இந்நிலையில் சைதை துரைசாமி தன் பேட்டியில் தன் வாழ்க்கை பற்றி “நான் கிராமத்தான். எங்கள் வீட்டில் கடை இருந்ததால்  காலையில் இட்லி சாப்பிடுவேன். ஆனால் எங்க அம்மாதான் என்னை  பழைய சாதம் எனும் அமிர்தத்தை சாப்பிட பழக்கினார். வெங்காயம் அல்லது மிளகாயோடு கம்மஞ்சோறு, கேழ்வரகு களி அல்லது எங்க ஊரில் புளிச்ச தண்ணின்னு சொல்லப்படும் நீராகாரம்தான் காலை உணவே. சென்னை வந்ததும் எல்லாமே மாறிப்போச்சு.” என்று சொல்லிக் கொண்டே வந்தவர், திடீரென்று…

“புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மரணம் எனக்கு கடும் அதிர்ச்சியை தந்தது. நூறு வயசு வரைக்கும் அவர் இருப்பார் என அவர் மீது அதிதீவிர நம்பிக்கையில் இருந்தவர்களில் நானும் ஒருத்தன். ஏன்னா அந்தளவுக்கு உடம்பை வைத்திருந்தார். ஆனால், எங்களோட நம்பிக்கை பொய்த்து போயிடுச்சு. சட்டுன்னு இறந்தார் தலைவர்.

எல்லாவற்றிலும் சரியாக இருந்த அவர், உணவு விஷயத்தில் அப்படியில்லை. குறிப்பாக, உடலுக்கு பொருந்தும் உணவு -பொருந்தாத உணவு என்று பாகுபாடு பார்த்து உண்ணுவதில் சரியாக கவனம் செலுத்தாமல் விட்டார். அதுதான் அவரது மரணத்துக்கான அடிப்படை காரணமே. அதுக்கு பின் தான் நான் என்னோட உடம்பையெல்லாம் பற்றி யோசிக்க ஆரம்பிச்சேன். திருந்தி நடக்க ஆரம்பிச்சேன்.” என்று விளக்கியிருக்கிறார்.

சைதையார் சொன்னது போல் எம்.ஜி.ஆர். நூறு வயது வரை இருந்திருந்தால் தமிழக அரசியல் வேற மாதிரி இருந்திருக்கும்!

ஹும், ஜெயலலிதாவின் மரணத்துக்கு ஆணையம் ஒன்றை துவக்கி அது ஒரு மார்க்கமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போதான் எம்.ஜி.ஆர். மரணத்துக்கான விடையே கிடைச்சிருக்குது! என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

click me!