அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை

By SG BalanFirst Published Apr 23, 2024, 8:03 PM IST
Highlights

தமிழகத்தில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படவில்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதைத் தடுக்க அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் இயக்கப்படும் பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் நின்று பயணிப்பதைத் தடுப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

இந்த விசாரணையில், பேருந்துககளைக் கூடுதல் இயக்கினாலும் இளைஞர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்து விபத்து நேர்வது குறையவில்லை என்றும் பல இடங்களில் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் இளைஞர்களால் தாக்கப்படுகின்றனர் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இந்த நிலையை பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் எப்படி சமாளிப்பார்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இந்தப் பிரச்சினைக்கான தீர்வு ஒன்றையும் தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளைப் பொருத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படவில்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அடங்கிய பதிலை உள்துறை செயலர், போக்குவரத்து துறை செயலர் இருவரும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

click me!