இட ஒதுக்கீட்டை அழிக்கும் மோடி அரசு: ரவிக்குமார் எம்.பி. காட்டம்!

By Manikanda PrabuFirst Published Apr 29, 2024, 1:24 PM IST
Highlights

பிரதமர் மோடி அரசு இட ஒதுக்கீட்டை அழிப்பதாக ரவிக்குமார் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்

மோடி அரசு ஓபிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டை சரியாகப் பின்பற்றுவதில்லை எனவும், இட ஒதுக்கீட்டை அழிப்பதாகவும் விழுப்புரம் எம்.பி.யும், விசிக பொதுச் செயலாளருமான ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆனால் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ஒழித்துக் கட்டி விடுவார்கள் என்ற அச்சம் இப்போது அதிகரித்துள்ளது. சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை மாற்றி பொருளாதார அடிப்படையில் EWS இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததே ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான திட்டத்தின் துவக்கம்தான்.

மோடி அரசு ஓபிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டை சரியாகப் பின்பற்றுவதில்லை. உயர்கல்வித் துறையை அதற்கு ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டலாம். 2021-22 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் ஆய்வறிக்கையைப்  (AISHE Report)  பார்த்தால் இதைப் புரிந்துகொள்ளலாம். ஓபிசி, எஸ்சி, எஸ்டி, பிரிவினரின் இட ஒதுக்கீடு எந்த அளவுக்குப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்த அறிக்கையில் வெளியாகியிருக்கும் புள்ளி விவரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மொத்தம் 15,97,688 ஆசிரியர்கள் பணி புரிவதாக அந்த அறிக்கை கூறுகிறது ( பக்கம் 161). அதில் எஸ்சி பிரிவினருக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தால் 239653 பேர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 148635 பேர்தான் எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக உள்ளனர். 91,018 இடங்கள் மறுக்கப்பட்டு பின்னடைவாக உள்ளன. எஸ்டி பிரிவினருக்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும். அதன்படி 119826 பேர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 41607 பேர் மட்டுமே எஸ்டி பிரிவிலிருந்து ஆசிரியர் பணியில் உள்ளனர். 78159 இடங்கள் மறுக்கப்பட்டு பின்னடைவாக உள்ளன.

ஆசிரியர் அல்லாத பணியிடங்களிலும் இதே போன்று இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக  12,08,446  ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உள்ளன.  அதில் எஸ்சி வகுப்பினர்  181876 பேர் உள்ளனர்; எஸ்டி வகுப்பினர் 56,569 பேர் உள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் 4 ஆம் நிலை பதவிகளிலேயே உள்ளனர்.

ரயில்களில் சைட்-லோயர் இருக்கைகளில் இருக்கும் வசதி: பலருக்கும் தெரியாத ஆப்ஷன்!

உயர்கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் மாநில அரசுகளால்தான் நடத்தப்படுகின்றன. மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, ஐஐஎம், போன்ற நிறுவனங்கள்தான் ஒன்றிய அரசால் நடத்தப்படுபவை. அவற்றிலும் ஆயிர்க் கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன.  

இது தொடர்பாக 12.12.2022 அன்று நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பியபோது அதற்குப் பதில் அளித்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ பின்னடைவு காலிப் பணியிடங்களையெல்லாம் உடனடியாக நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும்,  இதற்காகக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு மாதந்தோறும் அது ஆய்வு செய்கிறது என்றும்; 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘ மத்திய கல்வி நிறுவனங்கள் ( ஆசிரியர் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தவொரு பணியிடமும் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படவில்லை என்றும் பதிலளித்திருந்தார்.  

அதுமட்டுமின்றி, மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி பிரிவினருக்கென ரிசர்வ் செய்யப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231ம்; 620இணைப் பேராசிரியர் பதவிகளில் 401 ம்; 1357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276 ம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. எஸ்டி பிரிவினருக்கு அதுபோலவே 123 பேராசிரியர், 232 இணைப்பேராசிரியர் மற்றும் 188 உதவிப்பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளன. ஓபிசி பிரிவினருக்கு 367 பேராசிரியர் பதவிகளில் 311 பதவிகளும்; 752 இணைப்பேராசிரியர் பதவிகளில் 576 ம்; 2332உதவிப் பேராசிரியர் பதவிகளில் 672 ம் நிரப்பப்படவில்லை.

ஐஐடிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 11170 ஆசிரியர் பதவிகளில் 4502 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. ஐஐஎம் களில் எஸ்சி பிரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 97 பதவிகளில் 53 இடங்களும் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 40 பதவிகளில் 34 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை.” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அந்தப் பணியிடங்களையெல்லாம் நிரப்புமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒன்றிய கல்வி அமைச்சருக்குக்  கோரிக்கை கடிதம் அளித்து வலியுறுத்தினோம். ஆனால் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!