Ramadoss: ஒரே நாளில், ஒரே ஊரில் அச்சு முறிந்த இரு அரசு பேருந்துகள்.! அவல நிலை மாறுவது எப்போது?-ராமதாஸ் கேள்வி

By Ajmal KhanFirst Published Jun 9, 2024, 1:49 PM IST
Highlights

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும் என ராமாதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 

பழுதடைந்த தமிழக அரசு பேருந்து

தஞ்சாவூரில் நேற்று ஒரே நாளில்  அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான  இரு நகரப் பேருந்துகள் அச்சு முறிந்து  நடுவழியில் நின்றுள்ளன. ஓட்டுனர்கள் சிறப்பாக செயல்பட்டதால்  விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன.  இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக அரசுப் பேருந்துகள் பழுதடைந்து நிற்பதும், விபத்துக்கு உள்ளாவதும்  அதிகரித்து வருகின்றன. சென்னையில் பேருந்தில் ஓட்டை ஏற்பட்டு பயணி சாலையில் விழுந்து காயமடைந்தது, திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டது,  மயிலாடுதுறை  உள்ளிட்ட பல இடங்களில் பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகள் வாடிக்கையாகி விட்டன.

Latest Videos

BJP : ரவுடிகளை பாஜகவில் சேர்த்தது எல்.முருகன் காலத்தில் தான்.! தமிழிசைக்கு எதிராக களம் இறங்கிய திருச்சி சூர்யா

15ஆண்டுகள் பழமையான பேருந்துகள்

அவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் ஒரே நாளில், ஒரே ஊரில் இரு நகர பேருந்துகள் அச்சு  முறிந்து  நடுவழியில் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட முடியாத அளவுக்கு முற்றிலுமாக முடங்கி விட்டன என்று தான் பொருள். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன .இவை தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. 

அரசுப் பேருந்துகளின் இந்த அவல நிலைக்கு தமிழக அரசு தான் காரணம்.  பழுதடைந்த  பேருந்துகளை சரி செய்யவும், அதற்கு தேவையான உதிரி பாகங்களை வாங்கவும் போக்குவரத்துக் கழகங்களில் நிதி இல்லை. அதனால் கிட்டத்தட்ட 25%  பேருந்துகள் இயக்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இன்னும் சில பணிமனைகளில் மேலாளர்களே தங்களின் சொந்த செலவில் உதிரி பாகங்களை வாங்கி பழுது நீக்க வேண்டியிருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. அரசுப் பேருந்துகளை பழுது நீக்குவது போக்குவரத்துக் கழகங்களின் அடிப்படைக் கடமை. ஆனால், அதைக் கூட  செய்ய முடியாத அவல நிலைக்கு போக்குவரத்துக் கழகங்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

புதிய பேருந்துகள் அறிவிப்பு என்ன ஆச்சு.?

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஆயிரக்கணக்கில் புதிய பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாக  அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும்,  கடந்த மூன்றாண்டுகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 7,682 புதிய பேருந்துகள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் 1,000 மின்சார பேருந்துகள் என மொத்தம் 8,682 புதிய பேருந்துகள் வாங்கப்படும்;  ஒவ்வொரு மாதமும் 300-க்கும் அதிகமான புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த மாதம் 22-ஆம் நாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். ஆனால், அதன்பின் 20 நாட்களாகும் நிலையில் ஒரு புதிய பேருந்து கூட பயன்பாட்டுக்கு வரவில்லை.

அரசுப் பேருந்துகளின் சேவை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தவை.  மாநிலத்தின் பொருளாதாரமும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நிலையும் முன்னேற வேண்டும் என்றால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வலிமையாக இருக்க வேண்டியதும், அனைத்துக் கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டியதும் கட்டாயம் ஆகும். இதை உணர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும் என ராமாதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

பாஜகவிற்கு இன்னும் 20 சீட் குறைந்திருந்தால் அறிவாலயம் வாசலில் தமிழிசை காத்திருந்திருப்பார்.!! துரை வைகோ பதிலடி

click me!