நெருங்கும் பண்டிகைகள்... தொற்று பன்மடங்கு உயரும்... எச்சரிக்கும் ராதாகிருஷ்ணன்!!

By Narendran SFirst Published Jan 5, 2022, 7:06 PM IST
Highlights

பண்டிகைகள் நெருங்கும் நிலையில் கவனக்குறைவாக இருந்தால் தொற்று பாதிப்பு பலமடங்கு அதிகரிக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பண்டிகைகள் நெருங்கும் நிலையில் கவனக்குறைவாக இருந்தால் தொற்று பாதிப்பு பலமடங்கு அதிகரிக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு பின்னர் சற்று குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 35 ஆயிரம் பேருக்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொரோனா படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த வாரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 600 என்ற அளவுக்கு இருந்தது. இதனால், பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில், கொரோனா வைரஸ் உருமாறி ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகர பகுதிகளில் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு இன்று மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையே கொரோனா அதிகரிப்பால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் 1.16 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஒமைக்ரானால் பாதிக்கப்படும் நோயாளிகள் குறைவான நபர்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை தேவை. ஒமைக்ரானால் நுரையீரலில் தீவிர பாதிப்பு ஏற்படுவதில்லை.

கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜனும் கையிருப்பில் உள்ளது. ஆக்சிஜன் பாதிப்பு இல்லாவிட்டால் தொற்று பாதித்தவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம். ஆக்சிஜன் உருவாக்கக்கூடிய 217 இயந்திரங்கள் தயாராக உள்ளன. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கவனக்குறைவாக இருந்தால் தொற்று பாதிப்பு பலமடங்கு அதிகரிக்கும். மருத்துவ கட்டமைப்புகளை தயார் படுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். 

click me!