வட கிழக்கு பருவமழை இருக்கா ? இல்லையா ? தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார் ?

By Selvanayagam PFirst Published Nov 9, 2018, 9:20 AM IST
Highlights

தமிழகத்தை நோக்கி அடுத்த 4 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வர உள்ளதால், அது புயலாக மாறுமா அல்லது வலுவிழக்குமா என்பது குறித்து அடுத்துவரும் நாட்களில் தெரியும் என்றும் பொதுவாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே இருக்கும் என்றும்  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால், சில நாட்கள் மட்டுமே மழை பெய்த  நிலையில் மீண்டும் சென்னை உள்ளிட்ட உள்மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது.

அதே நேரத்தில்  வங்கக்கடலில் இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒருசில பகுதிகள் மட்டும் கடந்த ஒருவாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில்கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை காணப்பட்டு வருகிறது.

மழை இப்போ வந்துவிடும், அப்போ வந்துவிடும் என அறிவிப்புகள் வருகிறதே ஒழிய மழையைக் காணோம் என பொது மக்கள் புலம்பி வருகின்கிறனர். இந்நிலையில் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது கணிப்புகளை தெரிவித்துள்ளார்

வடகிழக்குப் பருவமழை நவம்பர் 1-ம் தேதி தொடங்கிவிட்டபோதிலும் எதிர்பார்த்த மழை இல்லை என்று மக்கள் கருதுகின்றனர். அது தொடர்பாக பலரும் கருத்துகளை ஃபேஸ்புக்கிலும் தெரிவித்து வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒரு வாரம் மட்டுமே ஆகி இருக்கிறது. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுமைக்கும் நமக்கு மழை தேவை அதில் சந்தேகம் வேண்டாம். ஆனால், ஒரு வாரத்துக்குள் மழை இல்லையே என எதிர்மறையாகச் சிந்திக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்..

கடந்த 2008-ம் ஆண்டில் நவம்பர் கடைசி வாரம் வரை மழையில்லாமல், நிஷா புயல் வந்து ஏராளமான மழையை நமக்குக் கொடுத்தது. 2015-ம் ஆண்டில்கூட நவம்பர் 8-ம் தேதி வரை மழையின்றி இருந்தது. ஆனால், அதன்பின் மழை அடுத்த 20 நாட்களில் அனைத்தும் மாறிப் போனது. ஆதனால் இப்போதே வடகிழக்குப் பருவமழை குறித்து எதிர்மறையாகச் சிந்திக்க வேண்டாம் என்றும் மழை இல்லையே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும், சென்னைக்கும் இன்னும் மழைக்கான காலம் இருக்கிறது. அடுத்த 4 முதல் 5 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கிவர உள்ளது. அந்தமான் நோக்கி நகரும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறும் சாத்தியமும், தமிழகத்தை நோக்கி வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தமிழகத்தை நோக்கி வரும் போது, அது புயலாக மாறுமா அல்லது வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா, அல்லது வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுமா என்பது அடுத்துவரும் நாட்களில்தான் தெரியும். எப்படி வந்தாலும், மழை மேகங்களைக் கொண்டுவரும் அல்லது சில நேரங்களில் மழை இல்லாமல் காற்றாகக் கூட வரலாம் என கூறி ஏமாற்றமடையச் செய்துள்ளார்.

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நாளை வரை மழை நீடிக்கும். ஆனால், அதன்பின் தமிழகம் முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும். இதனால் மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். மழைக்கான வாய்ப்பு அடுத்து வரும் நாட்களில் அதிகமாக இருக்கிறது. நம்பிக்கையுடன் இருப்போம் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்

click me!