School Book : 6ஆம் வகுப்பு கணக்கு பாடத்தில் சீட்டு கட்டு விளையாட்டு.! உடனே நீக்கிடுக- ஜவாஹிருல்லா

By Ajmal KhanFirst Published May 2, 2024, 3:08 PM IST
Highlights

தமிழக அரசின் 6ஆம் வகுப்பு பாட திட்டத்த்தில் சீட்டு கட்டு விளையாட்டு தொடர்பான பாடத்தை நீக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். 

கணக்கு பாடத்தில் சீட்டு கட்டு

சீட்டுகட்டை எடுத்துக்காட்டாக கொண்டு பாட திட்டம் அமைக்கப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆறாம் வகுப்பு கணக்கு பாடத்தில் மூன்றாம் பருவத்தின் தொகுதி இரண்டாவது புத்தகத்தில் இயல் இரண்டில் முழுக்கள் எனும் தலைப்பில் ஆன பாடம் இடம்பெற்றுள்ளது.  கணிதத்தில் முழுக்கள் குறித்து உவமையுடன் நடத்த பல்வேறு வழிமுறைகள் இருந்தும் சீட்டுக்கட்டு முறையை மாணவர்களிடையே அறிமுகப்படுத்துவது ஏற்புடையது அல்ல.  

தற்போது ஆன்லைன் ரம்மி மற்றும் இதர சூதாட்டங்களில் சீட்டு கட்டு முறையே முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை அரசே தடை செய்திருந்தது. இத்தகைய சூழலில் மாணவர் பருவத்திலேயே சீட்டு கட்டு விளையாட்டு குறித்தும் அதன் விளையாட்டு உத்தி குறித்தும் விரிவாக பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்திருப்பது ஏற்புடையது அல்ல.

 கொள்கைக்கு முரணானது

பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்திலும் இது போன்ற பாடங்கள் இருந்தன. அதனை கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை நீக்கி கேள்வித்தாள்களிலும் அந்த பாடங்கள் இடம்பெறாத வகையில் பார்த்துக் கொண்டது. இப்பாடத்திட்டம் அதிமுக அரசு காலத்தில் வடிவமைக்கப்பட்டது என்றாலும் கூட திராவிட மாடல் ஆட்சியில் இதே பாடம் நீடிப்பது கொள்கைக்கு முரணானது.

எனவே பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அந்த பாடத்தை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

பாம்பு கடித்தது குணமடைய கங்கை நீரில் இளைஞரை மிதக்க விட்ட குடும்பத்தினர்.. மூட நம்பிக்கையால் உயிரிழந்த பரிதாபம்

click me!