
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதி கோவைக்கு வருகை தர உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையை கண்டித்து, மசக்காளிபாளையம் பகுதியில் முற்போக்கு அமைப்புகள் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திக, விசிக, ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் தமிழர் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது "மோடியே திரும்பி போ" என பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். திடீரென பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ராமகிருஷ்ணன் கூறியதாவது, "ஒரிசா, பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தமிழர்களை பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசி அவமானப்படுத்தி வருகிறார். தொடர்ந்து தமிழர்கள் மீது வட மாநில மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் மோடி பேசி வருகிறார். தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய கல்வி நிதி உள்ளிட்ட நிதிகளை முழுமையாக ஒதுக்கவில்லை. தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிக குறைந்த நிதியை மட்டுமே பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார்.
மக்கள் தொகை குறைவாக இருப்பதாக பொய்யான காரணத்தை கூறி, கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இயற்கை விவசாயத்தை அழிக்கும் வகையில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் ஆராய்ச்சிக்கு ரூ.500 கோடி ஒதுக்கிவிட்டு, தற்போது இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள வருகிறார். அதனால் மோடி வருகையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம்"இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது, சிலர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.