
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம், தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை, கூட்டணி கணக்குகள், வாக்குச்சாவடி முகவர் கூட்டம் உள்ளிட்ட பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றன. பீகார் மாநில தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் நீடிக்கிறது.
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் விசிக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்காது என அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளரும், எம்பியுமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விசிக தேர்தல் அரசியலில் வந்ததில் இருந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது நாங்கள் முன்வைத்து வருகின்ற கருத்து. ஆனால் அதற்கான காலம் கனியும் நேரத்தில் அந்த கருத்தை சரியான முறையில் விசிக முன்வைக்கும். அதே சமயத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து துணைப்பொதுச்செயலாளரின் கருத்து தொடர்பாக கட்சியின் தலைவர் திருமாளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற விசிகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அது எங்களுடைய கோரிக்கையாக இருக்காது. பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டை முடிவு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.