விசாரணை கைதி மரணம் .. நள்ளிரவு வரை நடந்த விசாரணை.. காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் இடைநீக்கம்

By Thanalakshmi VFirst Published Jun 13, 2022, 11:09 AM IST
Highlights

சென்னை கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக நள்ளிரவு வரை காவல்துறை உயர் அதிகாரிகள்  விசாரணை நடத்திய நிலையில், கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் உட்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை கைதி சந்தேக மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதோடு மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

சென்னை கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக நள்ளிரவு வரை காவல்துறை உயர் அதிகாரிகள்  விசாரணை நடத்திய நிலையில், கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் உட்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை கைதி சந்தேக மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதோடு மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்த அப்பு என்ற ராஜசேகர் என்பவரை கொடுங்கையூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் காவல்துறையினர் கைது செய்து சமீபத்தில் விசாரித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ராஜசேகர் விசாரணையில், செங்குன்றத்தில் உள்ள தனது கூட்டாளியிடம் அந்த நகைகள் இருப்பதாக போலீசாரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. 

அதன்பேரில் காவல்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்ததில்,  நகைகள் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ராஜசேகரை கொடுங்கையூர் புறக்காவல் நிலையத்தில் வைத்து நேற்று காலை விசாரணை நடத்தி உள்ளனர் காவல்துறையினர். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துசென்று சிகிச்சை பெறச்செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

பின்னர் ராஜூவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைகாக மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அழைத்து சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக  கூறியுள்ளனர். தொடர்ந்து ராஜசேகரின் உறவினர்கள் மருத்துமனையில் முன்பு ஒன்றுகூடி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மேலும் இரண்டு நாள் சட்டவிரோதமாக விசாரணை என்ற பெயரில் ராஜசேகரை காவல்துறையினர் அடைத்துவைத்திருந்ததாகவும் அவர் சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு இணை ஆணையர் ஈஸ்வரன் நேரில் சென்று, விசாரணை கைதி மரணம் அடைந்ததை குறித்து நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். ராஜசேகரிடம் விசாரணை செய்த காவலர்கள் மற்றும் எவ்வாறு விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதன் தொடர்ச்சியாக கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ன், காவலர் சத்திய மூர்த்திய ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராஜசேகரின் சந்தேக மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த விசாரணை கைதி ராஜசேகர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்... வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!

click me!