
உற்சாகமாக பள்ளிக்கு சென்ற மாணவர்கள்
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது கடந்த மாதம் 13 ம் தேதியிலிருந்து விடப்பட்டது. இதனை அடுத்து சுமார் 30 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் சீரமைக்கப்பட்டும், ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் முதல் கட்டமாக 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டு வகுப்புகள், இன்று தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 20-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளும் 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்குகின்றன.இன்று பள்ளிகள் தொடங்கிய நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் ஒரு வாரத்திற்கு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை எப்போது பள்ளிகளை தொடங்கலாம்? மாலை எப்போது பள்ளிகளை முடிக்கலாம்? என்பது தொடர்பாக அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது. ஆனாலும் காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிக்கூடங்களை நடத்த மாதிரி நேரத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மாணவர்களை வரவேற்ற மோட்டு பட்லு
இதனிடையே கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 2166 பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளிகளில் வித்தியாசமான முறையில் வரவேற்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகளை கவரும் மோட்டு பட்லு பிரமாண்டமான பொம்மைகள் வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவியர்களை மோட்டு பட்லு பொம்மைகள் கைகொடுத்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ச்சியாக பள்ளியில் அளிக்கப்பட்ட வித்தியாசமான வரவேற்பை பார்த்த மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு மோட்டு பட்லு பொம்மையோடு கட்டி தழுவியும், அதனுடன் விளையாடியபடி நடனமாடி கொண்டாடினர்.
ரோஜா பூ- சாக்லெட் கொடுத்த ஆசிரியர்கள்
இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் திவ்யநாதன் தலைமையில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் மற்றும் சாக்லேட்கள் மற்றும் விவேகானந்தரின் கை அடக்க புத்தகங்களையும் வழங்கி உற்சாகமாக வாழ்த்தி வரவேற்றனர்.இதனையடுத்து நடைபெற்ற கடவுள் வழிபாட்டில் மாணவர்கள் கலந்துகொண்டனர். அப்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பல்வேறு அறிவுரைகள் வழங்கினா். இதனையடுத்து மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
முதல்நாள் பள்ளி திறப்பு என்றாலே சோர்வுடன் வருகைதரும் மாணவர்களை உற்சாகப்படுத்த ஊமச்சிகுளம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முன்னெடுத்த வித்தியாசமான முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.