தவெகவில் அங்கீகாரம் பெற நாடகம்.? யாரும் தாக்கப்பட்டதாக தெரியவரவில்லை- போலீஸ் விளக்கம்

Published : May 28, 2025, 08:49 AM IST
TVK VIJAY

சுருக்கம்

 த.வெ.க நிர்வாகிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக புகார். இது தொடர்பாக நடிகர் விஜய் காவல் துறையினர் வரம்பு மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், போலீசார் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவில்லை என விளக்கம்

தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்.? போலீசார் விளக்கம் : சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் எரிந்தது. இதனால் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியான த.வெ.க. நிர்வாகிகள் அப்பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர்.

தவெக நிர்வாகிகளை பூட்ஸ் காலால் மிதித்த போலீஸ்.? 

அப்போது போலீசார் தவெக நிர்வாகிகளை தடுத்ததாகவும், பூட்ஸ் காலால் மிதித்தாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டிருந்த அறிக்கையில், காவல் துறையினர் வரம்பு மீறிப் பேசி, அத்துமீறிச் செயல்படுவதைப் பார்த்த கழகத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதி (45), மக்களுக்கு உதவி செய்வதைத் தடுப்பது ஏன் என்று காவல் துறையினரை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். 

அப்போது காவல் துறையினர் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி, கழக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத்து, கீழே தள்ளியுள்ளனர். மேலும், இதைத் தடுக்கச் சென்ற கழக மகளிரணியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியின் ஆடையைக் காவல் துறையினர் பிடித்து இழுத்துத் தள்ளி விட்டுள்ளனர். காயமடைந்த கழக உறுப்பினர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைப்பதை முதலமைச்சர் ஏற்றுக்கொள்கிறாரா?

காவல் துறையினரைப் பார்த்து நியாயமான முறையில் கேள்வி கேட்ட த.வெ.க. பெண் நிர்வாகிகளை பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைப்பதையும், ஆடையைப் பிடித்து அந்த ஆடை கிழியும் அளவிற்கு அவர்களை இழுத்துத் தள்ளி விடும் காவல் துறையின் செயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா? என கேள்வி எழுப்பியிருந்தார்

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அளித்துள்ள விளக்கத்தில், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு சில அமைப்பின் நிர்வாகிகள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளின் தொடர்ச்சியாக மற்றும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் அளித்த புகார்களின் பேரில் சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையின்படி, செய்திகளில் வெளியானது போன்று காவல்துறையினரால் மேற்படி அமைப்பின் நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக தெரியவரவில்லை.

விஜய் புகார்- போலீசார் விளக்கம் என்ன.? 

மேலும், அவ்விசாரணையில் ஒருசிலர் அவர்கள் சார்ந்த கட்சியில் அங்கீகாரம் பெறுவதற்காக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்பி வருவதாகத் தெரியவருகிறது. இருப்பினும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள துணை ஆணையாளர் (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு) நியமித்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!