
பள்ளி பாடபுத்தகத்தில் வலராற்று பிழை : 10ஆம் வகுப்பு பள்ளி பாடபுத்தகத்தில் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் தொடர்பாக இடம்பெற்றுள்ள தவறான தகவலை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42 வது ராஜா திரு. சந்திர சைதன்யா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் தமிழ்நாடு தனிப்பெரும் நாகரிகமும், வரலாறும் கொண்ட மண். இந்த மண்ணின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது எங்களின் எட்டயபுரம் சமஸ்தானம். மகாகவி சுப்பிரமணிய பாரதியார், உமறுப் புலவர், இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் என வரலாற்று ஆளுமைகள் பலரும் வாழ்ந்த மண் எங்கள் எட்டயபுரம்.
இத்தகையோரின் பெருமைமிகு வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வேளையில், ஏற்கனவே உள்ள சில வரலாற்றுப் பிழைகளை திருத்தும் பணியும் காலத்தின் கட்டாயமாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி வாரியம் (SCERT) சார்பில் வெளியிடப்பட்ட 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த தவறான தகவலை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குமாறு, தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தோம். நமது பாடப் புத்தகத்தில் உள்ள வரலாற்றுப் பிழை குறித்தும் தரவுகளுடன் விளக்கினோம்.
நாங்கள் தெரிவித்த தகவல்களை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள், இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். வரலாற்றுப் பிழைகளை திருத்தி உண்மையான வரலாற்றை நம் பிள்ளைகள் கற்க வேண்டும் என்பதற்காக, நாங்கள் கேட்ட உடன் கடும் பணிச்சுமைக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.