
PMK party Rules Changed Against Anbumani Ramadoss: தமிழ்நாட்டில் முக்கிய கட்சிகளில் ஒன்றான பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதல் தொடர்ந்து வலுத்து வருகிறது. மேடையிலேயே ராமதாசும், அன்புமணியும் மோதிக் கொண்டபிறகு இருவரும் கட்சியில் தனித்தனியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இருவரும் கட்சிக்குள் தங்களது ஆதரவாளர்கள் பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறனர்.
ராமதாஸ் தரப்பு பாமக பொதுக்குழு கூட்டம்
இதனைத் தொடர்ந்து இருவரும் போட்டி போட்டு பாமக பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்தனர். அன்புமணி ராமதாஸ் தரப்பு சார்பில் பாமக பொதுக்குழு கூட்டம் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. அப்போது அன்புமணி தான் பாமகவின் தலைவர் என அந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேறப்பட்டது. இந்நிலையில், அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் தரப்பு சார்பில் பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் உள்ள சங்கமித்ரா அரங்கில் இன்று நடைபெற்றது.
பாமக விதிகளில் அதிரடி திருத்தம்
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமகவின் தலைவர் ராமதாஸ் தான் என்றும் தேர்தல் கூட்டணி மற்றும் கட்சி தொடர்பான அனைத்து நடவடிக்கையும் அவர் தான் மேற்கொள்வார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் பொதுக்குழுவுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் என்ற விதியில் திருத்தம் செய்து பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டணி குறித்து ராமதாஸ் தான் பேசுவார்
மேலும் தேர்தல் படிவத்தில் ராமதாஸ் தான் கையெழுத்திடுவார், தேர்தல் கூட்டணி குறித்து அவர்தான் முடிவு எடுப்பார். பாமகவில் மற்ற யாரும் தேர்தல் கூட்டணியோ அல்லது பேச்சுவார்த்தையோ நடக்கக் கூடாது கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கும் நபர்களை நியமிக்கும் அதிகாரம் இனி டாக்டர் ராமதாஸுக்கு மட்டுமே உண்டு என்று பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அன்புமணி நியமனங்கள் ஏதும் செல்லாது
மேலும் பாமகவில் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அன்புமணி நியமித்த நியமனங்கள், அவரால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் செல்லாது என்றும் ராமதாஸ் தரப்பு பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தவிர தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.