
3 people arrested with weapons in Coimbatore : தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் ஆயுதங்களோடு சுற்றித்திர்ந்தவர்களை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, சூலூர் அருகே செட்டிபாளையத்தில் பகுதியில் தலைமை காவலர் பிரபாகரன் , கனகராஜ், ஆகியோர் நேற்று முன் தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான 3 பேரை பார்த்து உள்ளனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபர்களை சோதனை செயதுள்ளனர். அப்போது அவர்களிடம் அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் தங்கி இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சென்று பார்த்த போது அது கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த விடுதி என தெரியவந்தது. இதனையடுத்து இந்த நபர்களுக்கு கல்லூரி விடுதியில் தங்க அனுமதி அளித்தவர்கள் இடம் விசாரித்த போது கல்லூரி மாணவர்கள் கூறுகையில், சீனியர் மாணவர்கள் தங்களது நண்பர்கள் வருவார்கள் அவர்களை தங்க வைக்குமாறு கூறியதாக தெரிவித்தனர். உடனடியாக இரண்டு காவலர்களும் மாணவர்களின் அறையில் சோதனை செய்தனர். அப்போது அதிபயங்கரமான பட்டா கத்தி மற்றும் வீச்சருவாள், ஸ்குரு டிரைவர் மற்றும் பேனாக் கத்தி உள்ளிட்ட பல பொருள்கள் இருந்தது கண்டுபிடித்தனர்.
மேலும் மாணவர்களின் விடுதியில் 2 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர். அப்போது பிடிபட்ட 3 பேரில் ஒருவர் தப்பியோட முயன்றார். அந்த நபரை துரத்தி பிடித்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியதில், மதுரையைச் சேர்ந்த கருப்புசாமி (24), சந்தோஷ் குமார் (20), பிரவீன் (19) என தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களில் கருப்புசாமி என்பவர் மீது கொலை முயற்சி, வீடு உடைத்து திருடுதல், வழிப்பறி ஆகிய 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இந்த நபர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரை ஆயுதங்களுடன் நள்ளிரவில் துரத்தி உள்ளனர். அப்போது அந்த மாணவர் தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவரை தேடிய போது தான் போலீசாரிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.