நீலக்குறிஞ்சி மலர்களை கடத்தும் மர்ம நபர்கள்… உதகையில் வேரோடு பிடுங்கிச் செல்லப்படும் அவலம் !!

By Selvanayagam PFirst Published Sep 17, 2018, 10:42 AM IST
Highlights

உதகை கல்லட்டி மலைப்பகுதிகளில்  பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்களை வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாம் நபர்கள் சிலர் அவற்றைப் பறித்து கடத்திச் செல்லும் சம்பவம் அப்பகுதியில் உள்ள இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கல்லட்டி, எப்பநாடு, அவலாஞ்சி, முக்குருத்தி, கோடநாடு, கீழ்கோத்தகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலர் செடிகள் காணப்படுகின்றன. இந்த மலைப்பகுதியில்  மொத்தம் 9 வகையாக குறிஞ்சி மலர் செடிகள் உள்ளன.

இவை அனைத்தும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பூக்கும். அதில் நீலக்குறிஞ்சி மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் தன்மை கொண்டது. அவை பூக்கும்போது மலைப்பகுதி முழுவதும் நீல நிற போர்வை போர்த்தியது போல ரம்மியமாக காட்சியளிக்கும்.

இது காண்போரின் கண்களை மட்டுமின்றி நெஞ்சத்தையும் கொள்ளையடிப்பதாக இருக்கும். மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

அதை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து, செல்கின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து புகைப்பட கலைஞர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கல்லட்டி மலைப்பாதையில் உள்ள ராமர் மலையில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி மலர்களை சில மர்ம ஆசாமிகள் பறித்து விற்பனைக்காக கடத்தி செல்கின்றனர். மேலும் செடிகளை வேரோடு பிடுங்கியெடுக்கவும் செய்கின்றனர்.

நீலக்குறிஞ்சி மலர்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், சிலர் அதனை பறித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் செடிகளை பிடுங்கி செல்வதால், மலைப்பகுதியில் அவற்றின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே நீலக்குறிஞ்சி மலர்களை கடத்தும் மர்ம ஆசாமிகள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர் செடிகளை பாதுகாக்கவும் முன்வர வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

click me!