தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பகப்பட்டால் மக்கள் புகார் தெரிவிக்க வேண்டும் – ஆட்சியர் வேண்டுகோள்…

First Published Oct 17, 2017, 7:15 AM IST
Highlights
People should report complaints if non-standard food items are sold


பெரம்பலூர்

பெரம்பலூரில் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்கப்பட்டால் மக்கள் உடனே புகார் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா அறிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களுக்கும், வணிகர்களுக்கும் உணவுப் பொருள்களின் தரம், விற்பனை குறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.  

உணவு வணிகர்கள், உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெறுவதற்கு உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் தொடர்ந்து விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.12 இலட்சத்திற்குள் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள், இ-சேவை மையங்கள் மூலம் பதிவுச்சான்று பெறலாம்.  

தரமற்ற உணவுப் பொருள்கள் மற்றும் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் குறித்த புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம்.  

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டும் புகாரைத் தெரிவிக்கலாம்” என்று அதில் அறிவித்து இருந்தார்.

click me!