பெண்ணையாறு நதிநீர் பிரச்சனையை தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு மீண்டும் கால அவகாசம் கோரியுள்ளது
தமிழ்நாடு - கர்நாடகா இடையே நதி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வருகிறது. காவிரி பிரச்னையில் பல ஆண்டுகளுக்கு பிறகே உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதேபோல், தென்பெண்ணையாற்றிலும் பிரச்சினை நீடித்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே யர்கோல் எனுமிடத்தில் அணை கட்டும் பணியைத் தொடங்கியது கர்நாடக அரசு. இந்த வழக்கில் முதலில் மத்திய அரசை அணுக வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனால் மத்திய அரசிடம் சென்ற தமிழக அரசுக்கு முறையான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
எனவே, தமிழ்நாடு அரசு மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றது. வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு கர்நாடகா இடையிலான பெண்ணையாறு நதிநீர் பிரச்சனையை தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு அடுத்தடுத்து கால அவகாசம் கோரி வருகிறது,
பாஜகவின் துர்கா பூஜை பந்தலை தொடங்கி வைக்கும் அமித் ஷா!
கடந்த மே மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நான்கு வாரங்களில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி மத்திய அரசு மீண்டும் கால அவகாசம் கோரியது.
இந்த நிலையில்ல், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு இடையே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண 12 வார கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், மத்திய அரசு கேட்கும் கால அவகாசத்தை வழங்கக் கூடாது என தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்காமல் இருப்பது மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது என தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைக்க உச்ச நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும், அதனை அமைக்காமல் மத்திய அரசு தொடர்ந்து கால அவகாசம் கோரி வருவது கவனம் ஈர்த்துள்ளது.