மூட்டைகளிலேயே முளைகட்டிய நெல்மணிகள்… தஞ்சை பூதலூர் கொள்முதல் நிலைய அவலம்!!

By Narendran SFirst Published Nov 7, 2021, 5:38 PM IST
Highlights

தஞ்சை பூதலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  நுகர்வோர் வாணிப கழக அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகளிடம் வாங்கப்பட்ட நெல் முட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வினாகும் அவலநிலை  தொடர்ந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்தன. தஞ்சை மாவட்டம் பாபநாசம், அய்யம்பேட்டை, வங்காரம் பேட்டை, அரையபுரம், குப்பை மேடு, பெருங்குடி, நத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு ஒரு வாரம் காலமான நெற்பயிர்கள் தொடர் மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. சேதமடைந்த நெற்பயிர்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் தஞ்சை பூதலூர் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான நெல்மூட்டைகள் மழையில் நினைந்ததால் மூட்டைகளில் முளைகட்டியுள்ளன. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மேலும் மாவட்டம் முழுவதும் 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், மீதி 20 சதவீதம் கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதுவரை 1.82 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்து உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்திருந்தனர்.

நெல் கொள்முதல் நிலையங்களில்  நுகர்வோர் வாணிப கழக அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகளிடம் வாங்கப்பட்ட நெல் முட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வினாவும் நிலை  தொடர்கிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், மற்றும் வண்ணாரப்பேட்டை, மேல உளூர் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் விவசாயிகளிடம் வாங்கப்பட்ட நெல் மூட்டைகளும், விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகளின் பல ஆயிரம் நெல் மூட்டைகளும் தொடர் மழையில் நினைந்து முளைத்து வீணாகியுள்ளது. இதனால் நெல் மணிகள் அனைத்தும் முளைத்து, கருக்காவாகி போனதால் கொள்முதல் நிலைய அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஏக்கருக்கு 20,000 முதல் 30,000 வரை செலவு செய்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை தமிழக அரசே கொள்முதல் செய்யவில்லை என்றால், தற்கொலை செய்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு நெல்லை காய வைப்பது, ஆட்கூலி என கூடுதலாக 2 ஆயிரம் வரை செலவு ஏற்படுவதாகவும் இதனால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், தீபாவளி பண்டிகையை கூட மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல், நெல் கொள்முதல் நிலையங்களில் காவல் காக்க கூடிய சூழலில் இருந்ததாகவும் கூறுகின்றனர். இதை அடுத்து தேங்கி உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், ஒரு நாளைக்கு ஆயிரம் முட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும், நடமாடும் நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இயற்கை பேரிடர் மற்றும் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து விவசாயிகள் தங்கள் நெல்லை காயவைத்து கொண்டு வரும் நிலையில் ஈரப்பதத்தை காரணம் காட்டி  விவசாயிகளை அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும் மழையில் நினைந்து நெல்மணிகள் முளைத்து வீணாகி வரும்  நிலமை தொடர்வதாகவும் கூறும் விவசாயிகள், இதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

click me!