என்னது ? திரும்பவும் ஒரு புயலா ? அய்யோ சாமி தாங்காதுப்பா!! நாளை மறுநாள் மீண்டும் ஒரு புயல்.. பாலசந்திரன் எச்சரிக்கை !!

By Selvanayagam PFirst Published Nov 16, 2018, 1:36 PM IST
Highlights

கஜா புயல் நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சூறையாடிச் சென்ற நிலையில் தற்போது தெற்கு வங்கக் கடலில் மையப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதனால் 19, 20 ஆகிய தேதிகளில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான கஜா புயல் நேற்று நள்ளிரவு 12.30 மணி முதல் 2.30 மணிக்குள் கரையை கடந்தது. இது நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தபோது 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 21 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மின் கம்பங்களும், டிரான்ஸ்ஃபார்மர்களும் நாசமாயின. இதே போல் கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்தப் புயலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்த கஜா புயல் காலை 11:30 மணியளவில் வலுகுறைந்து தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது அது திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது.

இதனால் மதுரை, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வரும் 18-ம் தேதி  தென் மேற்கு வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மீனவர்கள் இன்று மதியத்திற்கு மேல் கடலுக்கு செல்லலாம் என்றும் நவம்பர் 18-ம் தேதி தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு  உள்ளதால் வரும் 18, 19-ம் தேதிகளில் தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.,

இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, மதுரை, திருச்சி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!