நாளை முதல் தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை... வானிலை மையம் தகவல்!

By manimegalai aFirst Published Oct 31, 2018, 12:58 PM IST
Highlights

அடுத்து வரும் 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்கும்.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. 

இதே பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்கும். அதன் பின்னர் வரும் தினங்களில் படிப்படியாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் இதர பகுதிகள், கேரள, தெற்கு கர்நாடக பகுதிகளில் துவங்கும்.

அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூர், பொன்னேரி, மகாபலிபுரத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

tags
click me!