மக்களே உஷார்..சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கு கட்டுபாடு.. இது கட்டாயம்.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Jan 6, 2022, 10:01 PM IST
Highlights

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
 

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுபாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் உட்பட புதிய கட்டுபாடுகள் இன்று முதல் அமலாகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்களுக்கு தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் அனுமதி வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு மட்டும் கடந்த 10 நாட்களில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இச்சூழலில் சுற்றுலா தளங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  ஊட்டி வருகை புரியும் சுற்றுலா பயணிகளிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று பரிசோதிக்கபடுகிறது. அத்துடன் அதற்கான சான்றிதழ் சரி பார்க்கப்பட்ட பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.  மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான சான்றிதழ் நகல் அல்லது செல்போனில் சான்றிதழை காட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 2-வது டோஸ் செலுத்த குறிப்பிட்ட நாட்கள் பூர்த்தியாகாமல் இருப்பவர்களும், 2 டோஸ் செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டு குறிப்பிட்ட நாட்கள் கழித்தும் 2-வது தடுப்பூசி செலுத்தாதவர்கள் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா மையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க சுற்றுலா மையங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுவது அவசியமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறியப்பட்டு, அருகே உள்ள தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதேபோல் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தடுப்பூசி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

இதனிடயே தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 4,862 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,121 அதிகரித்து 6,983 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 3,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 2,481 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 6,983 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 44 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

click me!