கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நெல்லை கொக்கிரக்குளம் கிராம மக்கள் !! 10 ஆயிரம் சப்பாத்திகள் தயாரித்து அனுப்பும் பணிகள் தீவிரம்…

By Selvanayagam PFirst Published Aug 19, 2018, 6:43 AM IST
Highlights

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் சப்பாத்திகள் தயார் செய்து அனுப்பும் பணியை நெல்லை , மாவட்டம்  கொக்கிரகுளம் பகுதி மக்கள் தொடங்கியுள்ளனர். நேற்று  இரவு முதல் 3நாட்களுக்கு தொடர்ந்து பெண்கள், மாணவ மாணவியர், தன்னார்வலர்கள்  சப்பாத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் மழை காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளமும், வெள்ளக்காடுமாக காட்சியளிக்கும் கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. பல இடங்களில் சாலைகள், ரெயில் தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால், பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மழையும், வெள்ளமும் ஒருபுறம் மிரட்ட மறுபுறம் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலச்சரிவு சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடைய செய்து வருகின்றன. மலப்புரம், இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள  நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்து வருகின்றன.

சுமார் 2 வாரங்களாக மிரட்டி வரும் இந்த தொடர் மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்றும் பலத்த மழை கொட்டியது. அத்துடன் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களில் இன்னும் கனமழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இவ்வாறு பேரழிவில் சிக்கியிருக்கும் கேரளாவில் முப்படையினரும் அடங்கிய மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். அந்தவகையில் 40 ஆயிரம் போலீசார், 3,200 தீயணைப்பு வீரர்கள், கடற்படையின் 46 குழுக்கள், 13 விமானப்படை குழுக்கள், 16 கடலோர காவல்படை குழுக்கள், 21 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த பணிகளை இரவும், பகலுமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பட்பபட்டு வருகின்றன. முதரையில் இருந்து மட்டும் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் 9 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதே போன்று தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால் பவுடர், தண்ணீர், உடைகள் மற்றும் மருந்துகள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் சப்பாத்திகள் தயார் செய்து அனுப்பும் பணியை நெல்லை , மாவட்டம்  கொக்கிரகுளம் பகுதி மக்கள் தொடங்கியுள்ளனர். நேற்று  இரவு முதல் 3நாட்களுக்கு தொடர்ந்து பெண்கள், மாணவ மாணவியர், தன்னார்வலர்கள்  சப்பாத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சப்பாத்திகள் தயாரித்து முடித்ததும் அவை வேன்கள் மூலம் திருவனந்தபுரம் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இவை அந்தந்த பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!