பெண்கள்மீது நடக்கும் அநீதிகளைக் கண்டித்து முஸ்லீம் பெண்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்; குழந்தைகளோடு பங்கேற்பு...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 13, 2018, 2:44 PM IST
Highlights

பெண்கள்மீது நடக்கும் அநீதிகளையும், கொடுமைகளையும் கண்டித்து திருச்சியில் முஸ்லீம் பெண்கள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தாய்மார்கள்  தங்களது குழந்தைகளோடு பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினர்.
 

திருச்சி மாவட்டம், பாலக்கரையில் 'ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்' என்ற முஸ்லீம் அமைப்பினர் நேற்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். பாலக்கரை ரௌண்டானாவில் இருந்து சந்திப்பு ரௌண்டானா வரை இந்தப் போராட்டம் நடைப்பெற்றது.

இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு மகளிரணி பொறுப்பாளர் மும்தாஜ் பேகம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நவாஸ்கான் இதனை தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்றவர்கள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியிருந்தனர்.

இதன்மூலம், "பெண்கள்மீது நடக்கும் அநீதிகள், கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது, அச்சத்தில் இருந்து பெண்களை பாதுகாக்க வலியுறுத்துவது மற்றும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 
இந்தப் போராட்டத்தில் மும்தாஜ் பேகம், "இந்தியாவில் இளங்குமரி முதல் வயதான கிழவி வரை கற்பழிக்கப்படுகின்றனர். பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் சட்டப்படி பெண்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். பொது இடங்களில் பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும். பெண்மையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்" என்று பேசினார்.

இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளோடு பங்கேற்றனர். 

click me!