பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமித்ததால் அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 28ம் தேதி நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி, கௌரவத்தலைவர் ஜி.கே. மணி மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பொதுக்குழுவில் ராமதாஸின் மூத்த மகளின் பையனும், தனது பேரனுமான முகுந்தன் பரசுராமனை பாமகவின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் பொதுக்குழு மேடையிலேயே அன்புமணி - ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டது.
அன்புமணி கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் அரசியல் அனுபவம் இல்லாதவரை இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுப்பதா? குடும்பத்தில் எத்தனை பேருக்கு பதவி வழங்குவீர்கள் என கூறிவிட்டு மைக்கை தூக்கி போட்டார். இதற்கு ராமதாஸ் கட்சியை உருவாக்கியவன் நான். வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். முடிவுகளை நான் தான் எடுப்பேன். விருப்பம் இல்லாதவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் காட்டமாக கூறினார். இதனையடுத்து இருவரையும் பாமக நிர்வாகிகள் சமாதானம் செய்தனர்.
இதையும் படிங்க: பேரனை விட்டுக்கொடுக்காத தாத்தா! அன்புமணிக்கு எதிராக ஒரே போடாக போட்ட ராமதாஸ்!
இதனையடுத்து என்னால் உங்களுக்குள் தேவையில்லாத பிரச்சனை வேண்டாம் என்று கூறிய முகுந்தன் இளைஞரணி தலைவர் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ்: பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் தொடர்வார். பொதுக்குழுவில் அறிவித்த மறுநாளே அவருக்கு நியமனக் கடிதமும் கொடுத்துவிட்டேன் என்று கூறி அதிர்ச்சி அளித்தார். இதனால், பனையூரில் உள்ள வீட்டில் வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் பாமக இரண்டாக உடையப் போகுதா என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியல் விமர்சகரும் முன்னாள் பாமக நிர்வாகியுமான ரவீந்திரன் துரைசாமி கூறுகையில்: முகலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் மாதிரி இருவரும் பிரியமாட்டார்கள். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு பலமாக உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாமக 10 இடங்களில் போட்டியிட்டனர். அதில் ஒன்றில் மட்டும் சௌமியா அன்புமணி 2வது இடம் வந்தார். மற்ற 9 இடங்களில் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பெற்றனர். இது பாமக கட்சிக்கு பெறும் பின்னடைவு என கூறினார்.
மேலும் வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதில் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார். ஆனால் அன்புமணி அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் அளவிற்கு போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. அன்புமணிக்கு தொண்டர்களை ஒருங்கிணைக்கும் சக்தி இல்லை. ராமதாஸ் போல அன்புமணி உழைக்கவில்லை. அப்படி இருக்கும் போது குடும்பத்தில் இருந்து ஒருத்தரை நியமித்தால் போராட்டங்களை முன்னெடுப்பார் என்பதால் முகுந்தனை நியமித்தார்.
இதையும் படிங்க: கைவிட்ட நீதிமன்றம்! வேறு வழியே இல்லை! சிறைக்கு செல்கிறார் எஸ்.வி.சேகர்!
காடுவெட்டி குருவுக்கு இருந்த இடத்தை முகுந்தனுக்கு கொடுக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளார். அதை அன்புமணியால் ஏற்க முடியவில்லை. அவர் தன் குடும்பம் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கிறார். செளமியாவை ஏற்றுக்கொண்ட அவரால், முகுந்தனை ஏற்கமுடியவில்லை. இதனால் கட்சிக்குள் பிளவு உருவானால் பாமக காணாமல் போய்விடும். அதிகாரத்தைப் பலமுறை அனுபவித்தவர்கள். ஆகவே, அந்தளவுக்குக் கட்சியை உடைக்கும் யோசனையில் இறங்கமாட்டார்கள் என ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.