சென்னையில் குப்பை அகற்றும் சவாலை சமாளிக்க, மாநகராட்சி அதிகாரிகள் ஐரோப்பா சென்று நவீன தொழில்நுட்பங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்,
சென்னையில் குப்பைகளை அகற்றுவதிலும் அவற்றை அப்புறப்படுத்துவதிலும் சென்னை மாநகராட்சிக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. அந்த வகையில் குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து அளித்தால், அந்த வேலையை ஓரளவுக்கு எளிதில் செய்து விடலாம். ஆனால் பலமுறை சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் சென்னை மக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி
இதனால் குப்பைகளை தரம் பிரித்து அதன் பின்பு அதனை அழிப்பது என்பதில் சென்னை மாநகராட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சென்னையில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் பெருங்குடி குப்பை கிடங்கு மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அந்தப் பகுதி முழுவதும் மக்கள் வாழ முடியாத நிலையில், தொடர்ந்து சென்னை மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காலை மற்றும் மாலை வேலைகளில் கடுமையான துர்நாற்றம், கண் எரிச்சல் மற்றும் மழை காலங்களில் அளவுக்கு அதிகமான துர்நாற்றம், கொசு தொல்லை என பல்வேறு இடர்பாடுகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்களை குஷிப்படுத்துமே! தவிர அரசியலுக்கு ஒத்து வராது! கார்த்தி சிதம்பரம்!
பெருங்குடி குப்பை கிடங்கு 225.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் 34 லட்சம் கன மீட்டர் அளவில் பல்வேறு வகை குப்பைகள் இங்கு குவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கு 342.91 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் 252 ஏக்கர் பரப்பளவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் தொடரும் கூலிப்படைகள் மூலம் கொலைகள்.! அச்சத்தில் மக்கள்- கார்த்தி சிதம்பரம்
இந்நிலையில் கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய நகரங்களில் உள்ள சுத்தமான தொழில்நுட்பங்கள், நவீன குப்பைக் கிடங்குகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் ஐரோப்பாவிற்கு செல்ல உள்ளனர். இதற்கு உலக வங்கி ஆதரவு தெரிவித்துள்ளது. உள்ளூர் குப்பை கிடங்குகள் தொடர்பான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இது சிறந்த தீர்வுகளை எடுக்க தமிழகத்திற்கு உதவும் என சென்னை மாநகராட்சி கூறியிருந்தது.
சென்னை மாநகராட்சிக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு காங்கிரஸ் எம்.பி. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில்: இதற்கு முன்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கழிவு மேலாண்மை அகற்றுவது தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்று வந்ததில் இருந்து இந்த விஷயத்தில் கற்றுக் கொண்டது மற்றும் செயல்படுத்திய நடைமுறையை காட்ட முடியுமா? மோசமான குப்பை மேலாண்மை, தெரு நாய்கள் & கால்நடைகள், உடைந்த நடைபாதைகள் & குழிகள் நிறைந்த சாலைகள் ஆகியவை சென்னையின் தனிச்சிறப்புகளாக உள்ளன. கழிவு மேலாண்மை தொடர்பாக இந்தூருக்கு செல்லுங்கள்'' என்றார். கழிவுகளை வெற்றிகரமாக அகற்றுவதில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது. இதன் காரணமாகவே கார்த்தி சிதம்பரம் இந்தூர் பெயரை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.