
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி திமுக அரசை மிக கடுமையாக தாக்கி பேசினார். திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது என்பது குழந்தைகளுக்கு கூட தெரியும் என்று தெரிவித்த மோடி, திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து தமிழகம் விடுவிக்கப்படும். திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுண்ட்டவுண் தொடங்கி விட்டது என்றார்.
மேலும் ''திமுக ஆட்சியில் கரப்ஷன், மாஃபியா, கிரிமினல் என மூன்றும் உள்ளது. தமிழகத்தின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் திமுக அரசு தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்கு திமுக வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. திமுக அரசு வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் ஊழல் செய்வதிலேயே குறியாக இருக்கிறது. தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல டபுள் எஞ்சின் ஆட்சி அமையும்'' என்று பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது. மாண்புமிகு பிரதமர் அவர்களே…
அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து வளர்ச்சி
ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.
தமிழ்நாடு தலைகுனியாது
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் #NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தில்லியின் ஆணவத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது'' என்று தெரிவித்துள்ளார்.