
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானமானது "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை (Right to Work) நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும் (Demand for Employment) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மாநில செயல்திறன் அடிப்படையிலும் தொடர்ந்து நிதியொதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்;
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பெரும்பான்மையாக பலனடைந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட, சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்திட முந்தைய ஆண்டுகளின் ஒதுக்கீட்டிற்குக் குறையாமல் ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்;
உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதியொதுக்கீடு செய்யும் எனவுள்ள தற்போதைய புதிய நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பின்பற்றப்பட்ட வேலைக்கான தேவைக்கேற்ப நிதியொதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தொடர வேண்டுமென்றும், மேலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டினை, வேலைக்கான தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசே வகுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென்றும்;
இப்புதிய திட்டத்தில் மாநில அரசின் நிதிப்பங்களிப்பு 40 சதவிகிதமாக உயர்த்தப்படுகையில் மாநில அரசின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரிப்பதாக உள்ளது. எனவே, புதிய திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினைப் போலவே திருத்தி அமைக்கப்பட வேண்டுமென்றும்;
தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கி, பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு இத்திட்டத்திற்கு 'வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் - ஊரகம் (VB-G-RAM-G)' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி அவர்கள் இந்த தேசத்திற்கு வகுத்துத் தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவுகூரும் வகையில் இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டுமென்றும் ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது."
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005-இன் விதிமுறைகளின்படியே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் மேற்படி தீர்மானத்தை இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றித் தரவேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் தங்கள் வாயிலாக கேட்டு அமைகிறேன்” என்று கேட்டுக் கொண்டார்.