
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது அதிமுக குறித்தும், அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் குறித்தும் கருத்துக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும், குன்னம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் குறித்து பூங்குன்றன் நெகிழ்ச்சியான பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு தொண்டனின் குடும்பத்திற்கும் தலைவிக்கும் இடையிலான பந்தம் எத்தகையது என்பதை ஆர்.டி. ராமச்சந்திரன் அவர்களின் பேட்டி இன்று உலகிற்கு உணர்த்தியிருக்கிறது. பிரிந்து செல்பவர்களை நான் எப்போதும் குறை கூறியதில்லை. வாழ்க! என்று தான் சொல்லுவேன். ஏனென்றால் எனக்குத் தெரிந்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. எங்கிருந்தாலும் அவர்களுடைய வளர்ச்சியை கண்டு நான் ஆனந்தப்படுவேன். பிரிந்து செல்பவர்கள் எந்த சூழ்நிலையில் அந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது. அவரவர்களுக்கு அவர்களுடைய முடிவு சரி என்பது எனது நிலைப்பாடு.
19 ஆண்டுகாலம் புரட்சித்தலைவி அம்மாவின் நிழலில், அவரது சொல்லே மந்திரமெனப் பயணித்தவன் நான். இன்று தொலைக்காட்சியில் ஆர்.டி.ஆர் அவர்களின் அந்தப் பேட்டியைப் பார்த்தபோது, என்னையறியாமல் நான் உடைந்து அழுதேன். நீண்ட காலத்திற்குப் பிறகு இன்றுதான் உடைந்து அவரை விட அதிகமாக அழுதேன். நிமிர்ந்து பார்த்தால் அந்த தங்கத்தாரகையின் திருஉருவப்படம். மேலும் கண்ணீர்..!
"அம்மா படத்தை எடுக்கப் போகிறாயா?" என்று அவரது பெற்றெடுத்த தாய் கேட்ட அந்தக் கேள்வியைச் சொல்லி அவர் விம்மி அழுதபோது, அந்த அழுகை ஒரு தனிமனிதனின் அழுகையாக எனக்குத் தெரியவில்லை. அது கோடிக்கணக்கான உண்மைத் தொண்டர்களின் இதயத்தில் தகித்துக் கொண்டிருக்கும் உணர்வின் வெளிப்பாடு. ஒரு மகனுக்கு அவர் பெற்ற தாயும், எங்களை ஆளாக்கிய புரட்சித்தலைவி அம்மாவும் எவ்வளவு உன்னதமானவர்கள் என்பதை அந்த ஒரு நொடி நிரூபித்தது. ஆர். டி. ஆர் அவர்களே, உங்கள் கண்ணீரைப் பார்த்து நாங்கள் கலங்கிப் போனது உண்மைதான்.
உங்களைப் போன்ற ஒரு வீரனை, களத்தில் சிங்கமெனக் கண்ட உங்களை, இன்று இப்படி உடைந்து போயிருப்பதைப் பார்க்கும்போது எங்கள் நெஞ்சமெல்லாம் பாரமாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி..."உங்கள் கண்ணீரின் ஒவ்வொரு துளியிலும் புரட்சித்தலைவியின் திருவுருவம் தெரிகிறது. அதே கண்ணீர் எங்கள் கண்களிலும் கசிகிறது என்றால், அந்த கண்ணீர் துளிகளிலும் அம்மாவின் முகம் தான் நிறைந்திருக்கிறது. அந்த ‘அம்மா’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் எத்தனை மகிமை! "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்" — அப்படி புரட்சித்தலைவியின் பிள்ளையான உங்களின் கண்ணீரைப் பார்த்ததும் இந்த உடன்பிறப்பின் கண்களிலும் கண்ணீர்..!
நீங்கள் கவலைப்பட வேண்டாம். புரட்சித்தலைவி அம்மாவைத் தாயாக ஏற்றுக்கொண்ட அவரது பிள்ளைகளாகிய நாங்கள் உங்கள் உணர்வுகளோடும், உங்களோடும் என்றும் துணை நிற்போம். நெஞ்சமெல்லாம் பரவி நிற்கிறது உங்கள் தாய் மற்றும் பிள்ளையின் விசுவாசம்! அம்மாவின் பிள்ளைகளாய் நாம் என்றும் இணைந்திருப்போம் என பதிவிட்டுள்ளார்.