சிக்கன் விலை உச்சம்.. விஸ்வரூபமெடுத்த கறிக்கோழி விவசாயிகள் பிரச்சனை.. முக்கிய குழு அமைத்த அரசு!

Published : Jan 22, 2026, 09:52 PM IST
Chicken Price

சுருக்கம்

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் கறிக்கோழி உற்பத்தி சரிந்து ஒரு கிலோ சிக்கன் 400 ரூபாய் என உச்சம் தொட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளது. 

தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்புக்கான உற்பத்திக் கூலியை ரூ.6.50‍ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கறிக்கோழி உற்பத்தி சரிந்து ஒரு கிலோ சிக்கன் 400 ரூபாயை தொட்டுள்ளது. கறிக்கோழி விவசாயிகள் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில், அதிமுக இந்த விவகாரத்தை இன்று சட்டப்பேரவைக்கு கொண்டு சென்றது. இது குறித்து அமைச்சர்கள் நாளை பதில் அளிப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

கறிக்கோழி விவசாயிகள் பிரச்சனை

இந்த நிலையில், கறிக்கோழி விவசாயிகள் பிரச்சனையை தீர்க்கும் வகையில் தமிழக அரசு ஒரு குழு அமைத்துள்ளது. இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 50-55 கோடி கறிக்கோழி வகைக்கோழிகள் வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏறத்தாழ 20,000 கறிக்கோழிப் பண்ணை உரிமையாளர்கள் உள்ளனர். மேலும், ஏறத்தாழ 66 ஒருங்கிணைப்பாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை நடத்திய அரசு

கறிக்கோழி உற்பத்திச் செலவு உள்ளிட்ட, சிரமங்கள் குறித்து கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் வழங்கியதன் அடிப்படையில், கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி மற்றும் ஜனவரி 21ம் தேதிகளில் (நேற்று) கால்நடை பராமரிப்பு இயக்குநர் நடத்திய கூட்டத்தில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கறிக்கோழி வளர்ப்புப் பண்ணை உரிமையாளர்களிடையே வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் செய்துகொண்டு செயல்படுகின்றனர். இவர்களுக்கிடையே உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒப்பந்த விதிகளுக்குட்பட்டே தீர்வு காண முடியும் என சங்க நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

தொழில்நுட்ப குழு அமைப்பு

இருப்பினும், கறிக்கோழி வளர்ப்புப் பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தீர்வு காணும் வகையில் பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர், கால்நடை நோய் நுண்ணறிவுப் பிரிவு, வேளாண்மை துறை அலுவலர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது.

உரிய தீர்வு காணப்படும் என உறுதி

இந்த குழு கோழிப் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் ஆலோசித்து உள்ளீடுகள், தரம் மற்றும் செலவு, உற்பத்திப் பெருக்கத்திற்கான வழிவகைகள், வளர்ப்புப் பணிகள் மற்றும் பண்ணைச் செயல்பாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நோய்ப்பரவல் மற்றும் மருத்துவ சிகிச்சையிலிருக்கும் இடைவெளி, உற்பத்தி மற்றும் ஆகியவற்றிற்கிடையேயான பிரச்சினை தொடர்பான கொள்முதல் விவரங்களை ஆய்வு செய்து கறிக்கோழி வளர்ப்புத் தொழில் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TN Politics: இந்தியா கூட்டணி கூட்டத்தை கைகழுவிய திமுக! அறிவாலயம் முடிவுக்கு பின்னணியில் கமலாலயம்? பரபரப்பு தகவல்!
TN Rain Alert: சென்னை டூ கன்னியாகுமரி! 5 நாட்களுக்கு அடித்து ஊத்தப்போகும் மழை! மக்களே எச்சரிக்கை!