என் மனைவி துர்கா எப்படிப்பட்டவர் தெரியுமா? மேடையில் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!

By Manikanda Prabu  |  First Published Sep 15, 2023, 12:51 PM IST

என்னுடைய பாதி என சொல்லும் அளவுக்கு என் மனைவி துர்கா இருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று அவரது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், பெண்களின் உழைப்பையும், தியாகத்தையும் புகழ்ந்து மிகவும் உயர்வாக பேசினார்.

தமிழக மக்களால் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளேன். தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறேன். பெரியார், அண்ணா, கலைஞரிடம் கற்ற பாடங்களின் அடிப்படையில் திட்டங்களை தீட்டி வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

தமிழ்நாடு அரசின் திட்டங்களை இந்தியாவே உன்னிப்பாக கவனிப்பதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இது பெண்களின் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சி எனவும், பெண்களுக்கு இனி வானமே எல்லை என்றார். “எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்; பெண்களின் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சி இது. கவலைகளை போக்கும் ஆட்சி.” என ஸ்டாலின் கூறினார்.

பெண்களின் உழைப்பை பெருமிதமாக நினைவுகூர்ந்த ஸ்டாலின், உங்க மனைவி என்ன பண்றாங்கனு கேட்டா, சும்மா இருக்காங்கனு சொல்லுவாங்க. சும்மாவா இருக்கீங்க நீங்க? என கேள்வி எழுப்பினார். “பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளை யாரும் கணக்கில் கொள்வதில்லை. ஆனால், மகளிருக்கான உரிமையை கொடுக்கனும், அவர்களது உழைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் மகளிர் உரிமைத் தொகை.” என ஸ்டாலின் கூறினார்.

தாயின் கருணை, மனைவியின் உறுதுணை, மகளின் பேரன்பு இவை எல்லாம் ஒருவருக்கு கிடைத்து விட்டால் வேறு செல்வம் எதுவும் தேவையில்லை என சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், உண்மையில் உலகை வழி நடத்துவது தாய்மையும், பெண்மையும்தான் என்றார்.

தொடர்ந்து பேசிய  முதல்வர் ஸ்டாலின், “என்னுடைய தாய் தயாளு அம்மாள் கருணையே வடிவானவர்கள். சிறு வயதில் நான் ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால் அன்றைக்கு மழை வரக்கூடாது என வேண்டி கொள்வார். எனது அரசியல் வாழ்க்கையில் தொடக்க காலக்கட்டத்தில் சிறு சிறு சம்பவங்கள் கூட என் அம்மாவிடம் சொல்லி தான் கலைஞரிடம் சொல்லுவேன். தற்போது, வயது முதிர்ந்த நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் அவர் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார். நான் அவர்களை போய் பார்க்கும்போதெல்லாம் அவரின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.” என்றார்.

மகளிர் உரிமைத் தொகையை எப்படி சேமிக்கலாம்? தமிழக அரசு கொடுக்கும் ஐடியா!

அதேபோல், தன்னுடைய பாதி என சொல்லும் அளவுக்கு தனது மனைவி துர்கா இருப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “என்னுடைய பாதி என சொல்லும் அளவுக்கு என் மனைவி துர்கா இருக்கிறார். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள். எல்லாவற்றிலும் உற்றதுணையாக உறுதுணையாக இருந்து என்னுடைய பெரும் சக்தியாக இருப்பது என் மனைவி துர்காதான்.” என்றார்.

“திருமணமாகி ஐந்தாவது மாதத்தில் மிசாவில் கைது செய்யப்பட்டு நான் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டேன். என் மனைவி அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல. முதலில் அவருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என சொல்லி தன்னை பக்குவப்படுத்தி கொண்டார். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள். எல்லாவற்றிலும் எனக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருந்து என்னுடைய மிகப் பெரிய சக்தியாக இருப்பது எனது மனைவி துர்காதான்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், தன்னுடைய மகள் செந்தாமரையை அன்பின் வடிவம் என குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், “கருணைமிகு தாய், தூணாக விளங்கும் மனைவி, தன்னம்பிக்கையும் பேரன்பும் கொண்ட மகள் என இந்த மூன்றும் எனக்கு கிடைத்துள்ளதால் நான் மிகவும் கொடுத்து வைத்தவன். இதே மாதிரி குணம் கொண்டவர்கள் தான் மகளிர் அனைவரும்.” என்று புகழாரம் சூடினார்.

click me!