இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி திமுக ரைடர்ஸ் குழு இரு சக்கர வாகன பேரணியை தொடங்கியுள்ளது. இதனை அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த பேரணியை முன்னிட்டு கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக்காத ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “‘வெல்க நாடு.. வெல்க நாடு.. வெல்க வெல்கவே’ என்று காஞ்சித் தலைவன் திரைப்படத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய பாடல் வரிகள், கலிங்கத்துப்பரணி எனும் தமிழ் இலக்கியத்தைப் போன்ற ஓசை நயத்தைக் கொண்டிருக்கும். “வீர சங்க நாதம் கேட்டுப் படைகள் செல்கவே” என்று அதில் போர்ப்பரணி பாடியிருப்பார் நம் உயிர்நிகர் தலைவர். திரைப்படக் காட்சியில் கண்ட அந்த எழுச்சியையும் உணர்ச்சியையும் ஜனநாயகக் களத்தில் உருவாக்கியுள்ளது குமரி முனையிலிருந்து தொடங்கிய கழக இளைஞரணியின் கருப்பு-சிவப்பு சீருடையுடன் கூடிய இருசக்கர வாகனப் பேரணி.
முக்கடல் தாலாட்டும் கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நிறுவிய வானுயர அய்யன் திருவள்ளுவர் சிலை வாழ்த்துவது போல, அண்ணல் காந்தியடிகள் மண்டபத்தின் அருகிலிருந்து உரிமைப் போர் முழக்கத்துடன் இந்த இரு சக்கர வாகனப் பேரணியை நவம்பர் 15 அன்று தொடங்கி வைத்திருக்கிறார் இளைஞரணியின் செயலாளரும் இளைஞர்நலன் – விளையாட்டுத்துறை - சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான தம்பி உதயநிதி.
உத்தமர் காந்தியைக் கொன்ற கொடியவன் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளில், கோட்சே வாரிசுகளின் அரசியல் அதிகார அராஜகத்தை எதிர்த்து, தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கை வாரிசுகளான நம் கழக உடன்பிறப்புகள் உரிமைப் போருக்கான ஆற்றல் மிக்க ஜனநாயகப் படையின் வீரர்களாக இருசக்கர வாகனத்தில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
நவம்பர் 15-ஆம் நாள் குமரி முனையில் தொடங்கிய இந்தப் பேரணி தென்மாவட்டங்களை உள்ளடக்கிய வள்ளுவர் மண்டலத்திலும், மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பெரியார் மண்டலத்திலும், வடமாவட்டங்களை உள்ளடக்கிய அண்ணா மண்டலத்திலும், காவிரிப் படுகை மாவட்டங்களை உள்ளடக்கிய கலைஞர் மண்டலத்திலுமாக 234 தொகுதிகளுக்கும் 13 நாட்களில் சென்று, மொத்தமாக 8 ஆயிரத்து 647 கிலோ மீட்டர் பரப்புரை பயணம் மேற்கொண்டு நவம்பர் 27-ஆம் நாள் சேலத்தில் நிறைவடைகிறது.
அந்த சேலத்தில்தான் டிசம்பர் 17-ஆம் நாள் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு மாநாடாக எழுச்சிமிக்க இளையோரின் புதுப் பாய்ச்சலுடன் நடைபெறவிருக்கிறது. அதே சேலத்தில், 1944-ஆம் ஆண்டு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில், பேரறிஞர் அண்ணா முன்மொழிந்த ‘அண்ணாதுரை தீர்மானம்’ வாயிலாக ‘திராவிடர் கழகம்’ என நம் தாய்க் கழகத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது. அந்தக் கழகத்தின் கொடியை உருவாக்கும்போது, கருப்பு நிறத்தின் நடுவே, தன் குருதியால் சிவப்பு வட்டம் வரைந்து கொள்கை உணர்வை வெளிப்படுத்தியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.
தாய்க் கழகத்திற்குப் பெயர் சூட்டப்பட்ட சேலம் மாநகரில் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், உங்களில் ஒருவனான நான் ஒரு தாயின் மனநிலையுடன் காத்திருக்கிறேன். இன்று கழகத்தின் தலைவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக உங்களின் பேரன்புடன் பொறுப்புகளை வகித்தாலும் ஏறத்தாழ 35 ஆண்டுகள் கழக இளைஞரணியை சுமந்தவனல்லவா! அது பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, உயர்ந்து நிற்கும் காலம் வரை அதன் வளர்ச்சி ஒன்றே என் சிந்தனையாக, செயல்பாடாக அமைந்தது.
1949-ஆம் ஆண்டு சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி வைத்தார் பேரறிஞர் அண்ணா. அப்போது அவரும் அவரது தம்பிமார்களான தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர், நாவலர் உள்ளிட்ட அனைவருமே இளைஞர்கள்தான். அவர்கள் அரசியல் களத்தில் வேகத்துடனும் வியூகத்துடனும் செயல்பட்ட காரணத்தால் 18 ஆண்டுகளில் தி.மு.க. தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது.
இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி 30 ஆண்டுகள் கடந்த நிலையில், புதிய இளைஞர்களால் இயக்கத்திற்குப் புது ரத்தம் பாய்ச்சும் வகையில்தான் 1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் மதுரை ஜான்சிராணி பூங்காவில் கழகத்தின் இளைஞரணியைத் தலைவர் கலைஞர் தொடங்கி வைத்தார்கள்.
இராபின்சன் பூங்காவில் தொடங்கிய இயக்கத்தின் தொடர்ச்சிதான் ஜான்சிராணி பூங்காவில் உருவான இளைஞரணி. “விருப்பமுள்ளவராம் பதவியில் பல பேர்… அவர் வேண்டாம்! நெருப்பின் பொறிகளே! நீங்கள்தாம் தேவை!’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் தன் 21-ஆம் வயதில் இளைஞராக இருந்தபோது எழுதிய கவிதை வரிகளுக்கேற்ப, கழகத்தின் துணை அமைப்பாகவும், எந்த நெருக்கடியிலும் துணை நிற்கும் அமைப்பாகவும் திகழ்ந்தது இளைஞரணி. தலைவர் கலைஞர் ஆணையிட்டால் ஏவுகணை போல எதிரிக் கூட்டம் நோக்கிப் பாயும் பட்டாளமாக இளைஞரணி செயல்பட்டது.
“ஈட்டியின் முனைகளே.. எழுங்கள்! தீட்டிய கூர்வாட்களே… திட்டமிதோ! கட்டிய நாய்களல்ல நாம்.. எட்டிய மட்டும் பாய்வதற்கு! தட்டிய மாத்திரத்தில் கொட்டம் அடங்க வேண்டும்!” என்ற அவரது கவிதை வரிகளுக்கு நிகராக இளைஞரணியின் பணிகள் தொடங்கின, தொடர்ந்தன. முதலில் ஐந்து பேர் கொண்ட அமைப்புக்குழுவுடன் உருவாகி மாவட்டம், ஒன்றியம், நகரம் என அனைத்து நிலைகளிலும் அமைப்புகளை உருவாக்கிய இளைஞரணியின் செயலாளராக 1982-இல் உங்களில் ஒருவனான என்னை நியமித்தது கழகத் தலைமை. அணியின் மாநிலத் துணை அமைப்பாளர்களாக திருச்சி சிவா, தாரை கே.எஸ்.மணியன், வாலாஜா அசேன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகம் அப்போது எதிர்க்கட்சியாக இருந்தது. தலைவர் கலைஞர் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், மக்கள் மனதில் தமிழினத் தலைவராகவும் வீற்றிருந்தார். தமிழ்நாட்டின் அரசியல் சக்கரத்தைச் சுழற்றும் அச்சாணியாகத் தலைவர் கலைஞர் திகழ்ந்தார். அவர் ஆணையிட்டால் போதும், அரை நாள் அவகாசத்தில் பல இலட்சம் பேர் குவிந்துவிடுவார்கள். ஊர்வலமா, கண்டன ஆர்ப்பாட்டமா, மறியலா, மாநாடா எதுவாக இருந்தாலும் அந்த இலட்சம் பேரில் இலட்சியப் படை வீரர்களாக இளைஞரணியின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். இலங்கைத் தமிழர் உரிமை காக்கும் போராட்டம், இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கின்ற போராட்டம், ஆளுங்கட்சியின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத போராட்டம் எனக் கழகம் முன்னெடுக்கும் களங்களில் இளைஞரணி முனைப்புடன் பங்கேற்கும்.
‘வெட்டி வா என்றால் கட்டி வரக் கூடியவர்கள் என் உடன்பிறப்புகள்’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள். இளைஞரணி எனும் கொள்கைப் படை வெட்ட வேண்டியதை வெட்டி, அவற்றை முறையாகக் கட்டி, வீச வேண்டிய இடத்தில் வீசிவிட்டு, கடமையை நிறைவேற்றிய வீரர்களாகத் தலைவர் கலைஞர் முன் நிற்கும். எத்தனை மறியல்கள், எண்ணற்ற சிறைவாசங்கள். அத்தனையையும் கொள்கையை வளர்ப்பதற்கான அனுபவ உரமாக ஆக்கிக்கொண்டது இளைஞரணி.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் பயணித்து திராவிடக் கொள்கைகளை விதைத்து, நீர் வார்த்து, வளர்த்தவர்கள். அந்த உணர்வை அடுத்த தலைமுறையிடம் ஊட்ட வேண்டும் என்பதற்காகவும், இளைஞரணியின் தலைமை அலுவலகமாக அன்பகம் கட்டடத்தைப் பெறுவதற்கான நிதி திரட்டவும் தமிழ்நாடு முழுவதும் உங்களில் ஒருவனான நான் பயணித்தேன். இளைஞரணியின் துணை அமைப்பாளர்கள் துணை வருவார்கள்.
கிளைகள்தோறும் கழகத்தின் இருவண்ணக் கொடியேற்றம், படிப்பகங்கள் திறப்பு, கழகத்தினர் வீட்டில் தேநீர் அருந்தி மகிழ்தல், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல், பொதுக்கூட்டம் என ஒவ்வொரு நிகழ்வுமே கொள்கை விளக்கமாக அமையும். ஒவ்வொரு நிகழ்விலும் நிதி திரட்டப்படும். அப்படித் திரட்டிய நிதியில்தான், கழகத்தின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த இனமானப் பேராசிரியர் அவர்கள் இளைஞரணி, தொ.மு.ச., சென்னை மாவட்டக் கழகம் ஆகியோருக்கிடையே வைத்த ஆரோக்கியமான போட்டியில், அவர் நிர்ணயித்த பத்து இலட்ச ரூபாய் என்ற இலக்கைக் கடந்து, 11 இலட்ச ரூபாயை நிதியாகத் திரட்டி, தலைமையிடம் அளித்து அன்பகத்தை வசமாக்கியது இளைஞரணி. அன்பான இதயங்கள் கொண்ட தமிழ்நாட்டு மக்களும் நம் வசமாயினர்.
எத்தனையெத்தனை நினைவுகளோ நெஞ்சத்தில் சுழல்கின்றன. தான் வளர்த்த பிள்ளை, தன் தோளுக்கு மேல் வளர்ந்து, தானே தன் கடமைகளை முனைப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றும் ஆற்றலைப் பார்த்து மகிழும் தாயின் மனநிலையுடன், தம்பி உதயநிதியையும் அவர் தலைமையிலான இளைஞரணியில் உள்ள ஒவ்வொருவரின் செயலாற்றலையும் கண்டு மகிழ்கிறேன். மாநாடு சிறக்க தாயுள்ளத்துடன் வாழ்த்துவதுடன், தாய்ப் பாசத்துடன் சில அறிவுரைகளை மாநாடு நடைபெறும்வரை அவ்வப்போது இத்தகைய மடல் வாயிலாக வழங்குவேன்.
அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக்காத ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன. மதவாத – மொழி ஆதிக்க - மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது. இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024-ஆம் ஆண்டில் மக்கள் எழுதப் போகிறார்கள். அதற்கான விழிப்புணர்வுப் பரப்புரைதான் இளைஞரணி மேற்கொண்டிருக்கும் இரு சக்கர வாகனப் பேரணி.
கருப்பு-சிவப்பு இளைஞர் படை மக்களிடம் செல்லட்டும். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதால் நீட் தேர்வு போன்ற கொடூரங்கள் எத்தனை உயிர்களைப் பறித்துள்ளன என்பதை எடுத்துச் சொல்லட்டும். நீட் விலக்கிற்கான அரைக் கோடி கையெழுத்துகளைப் பெறட்டும். ஜனநாயகப் போர்க்களத்தில் வெல்லட்டும்!” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.