நிதிப்பகிர்வு தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை எனவும், நம்மிடம் இருந்து பெறும் வரியை ஒப்பிடும் போது, குறைவான நிதிபகிர்வையே அளிப்பதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரமானது மிக்ஜாம் புயலின் போது, தென் மாநிலங்களை கனமழை தாக்கியபோதும் மீண்டும் பூதாகரமானது.
தமிழ்நாட்டுக்கான நிதியை முன் கூட்டியே ஒதுக்கி விட்டதாக மத்திய அரசு கூறியது. ஆனால், மாநில பேரிடம் நிவாரண நிதியில் இருந்து ஏற்கனவே தர வேண்டிய தொகையைத்தான் மத்திய அரசு வழங்கியது. சேதம் அதிகம் என்பதால், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதில் இருந்து எந்த தொகையையும் மத்திய அரசு விடுவிக்கவில்லை எனவும் தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியது.
இதனிடையே, சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதல் நிதியை கொடுத்துள்ளது என்றார். “தமிழகத்துக்கு மத்திய அரசு ஒன்றுமே கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். தமிழகத்துக்கு மத்திய அரசு நிறைய கொடுத்துள்ளது. 2014 - 2023 வரை தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. அதேநேரம் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி. தமிழகத்தில் இருந்து பெற்ற வரியைவிட கூடுதலாகவே நிதி கொடுத்துள்ளோம்.” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்துக்கு மொத்தமாக செஸ் வரி மூலமாக 2014-15 முதல் இன்று வரை ரூ.57,557 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரியும் தவறாமல் கொடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், நிதிப்பகிர்வு தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாநில அரசுக்கு எந்த வகையான உதவியையும் ஒன்றிய அரசு வழங்காதது வருத்தம் அளிக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்களாக இருந்தாலும் சரி, அவர்களின் நிதியுதவியுடன் நடக்கும் திட்டங்களாக இருந்தாலும் சரி மாநில அரசு அதிகமான பங்களிப்பை வழங்குகிறது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “2014ஆம் ஆண்டு முதல் 2023 மார்ச் வரை தமிழ்நாட்டில் இருந்து ரூ.6.23 லட்சம் கோடி நேரடி வரி வருவாயாக ஒன்றிய அரசு பெற்றுள்ளது. ஆனால், மறைமுக வரிவருவாய் குறித்து எந்த தரவுகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. நம்மிடம் இருந்து ஒன்றிய அரசுக்கு செல்லும் ஒரு ரூபாய்க்கு நமக்கு அங்கிருந்து கிடைப்பது 29 பைசாதான். 2014-2023 வரை தமிழ்நாட்டில் இருந்து நேரடி வரி வருவாயாக ரூ.6.23 லட்சம் கோடி அளவிற்கு மத்திய அரசு வசூலித்துள்ளது. ஆனால், 2014 முதல் 2023 மார்ச் வரை ரூ.4.75 லட்சம் கோடி மட்டுமே தமிழ்நாட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து கிடைத்துள்ளது. இதில் ரூ.2.46 லட்சம் கோடி மத்திய வரி பகிர்வு, ரூ.2.28 லட்சம் கோடி மானியம் மற்றும் உதவித்தொகை அடிப்படையில் வழங்கப்பட்டது.
ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விகிதம் முற்றிலும் மாறுபட்டு உள்ளது. 2014ஆம் ஆண்டில் இருந்து 2023 மார்ச் வரை உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு நேரடி வரி வருவாயாக ரூ.3.5 லட்சம் கோடி சென்றுள்ளது. ஆனால், அம்மாநிலத்துக்கு ஒன்றிய அரசு திரும்பக் கொடுத்தது ரூ.15.35 லட்சம் கோடி.” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: “சென்னை மெட்ரோ 2வது கட்ட திட்டம் ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 50 சதவீத நிதியை ஒன்றிய அரசு தர வேண்டும். இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்று வரை அதற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதே காலகட்டத்தில் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகள் முழுவதும் மாநில அரசின் நிதியில் நடக்கிறது. ஒன்றிய அரசு உரிய பங்களிப்பை அளித்தால் இன்னும் வேகமாக பணிகளை முடிக்க முடியும்.
ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ.72,000 கொடுக்கிறது. தமிழ்நாடு அரசு ரூ.1.68 லட்சம் கொடுக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்களாக இருந்தாலும் சரி, அவர்களின் நிதியுதவியுடன் நடக்கும் திட்டங்களாக இருந்தாலும் சரி மாநில அரசு அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. பெற்ற வரியை விட 2 மடங்காக நிதி கொடுத்துள்ளோம் என10 ஆண்டுகளாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், விலைவாசி உயர்வு, பண மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றை எல்லாம் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.
மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்காக கோரப்பட்ட நிவாரண நிதியை ஒன்றிய அரசு தற்போது வரை வழங்கவில்லை. மாநில அரசின் நிதியிலே, இதுவரை ரூ.2027 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு வாங்கும் கடன்களை முதலீட்டுக்குள் கொண்டு வருகிறது. கடன் வாங்கும் தன்மையை தமிழ்நாடு அரசு எப்போதும் சரியாக மேலாண்மை செய்து வருகிறது.” என்று தங்கம் தென்னரசு புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டார்.
ஆட்சிக்கு வந்த போது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ரூ.4000 வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், “மகளிருக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பயன்தரும் பல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியது. ஒருபோதும் திமுக அரசால் செய்ய முடியாது என சிலரால் கூறப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 1.15 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெறுகின்றனர். தற்போது கூட பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.” என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.