மிக்ஜாம் புயல் பாதிப்பால் தொடர் விடுமுறை விடப்பட்ட நாட்களை ஈடு செய்யும் வகையில், சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை
வட கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. மேலும் மக்களின் இயல்பு வாழக்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. வெள்ள நீர் பல்வேறு இடங்களில் தேங்கியதால் ஒரு வார காலமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டது. பாடங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்
மேலும் பொதுத்தேர்வு எழுத கூடிய மாணவர்கள் பாதிப்படைந்தனர். இதனையடுத்து மழைக்காக விடுமுறை விடப்பட்ட நாட்களுக்கு ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தவும், தேர்வு நடத்தவும் அந்த,அந்த மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்துக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதனையடுத்து சென்னையில் 4 சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஜனவரி 6 மற்றும் 20ஆம் தேதிகளிலும், பிப்ரவரி மாதம் 3 மற்றும் 17ஆம் தேதிகளிலும் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களின் பாட வேளைகளை பின்பற்றி பாடங்களை நடத்திட வேண்டும் என சென்னை முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்